ரத்தினேஷின் கேள்விகளுக்கு என் பதில்கள்
ரத்தினேஷ் அவர்களின் கேள்விகளுக்கு என் பதில்கள்:
ஒரு கவிதை கிளறி விட்ட சில பழைய நினைவுகளும், எழும் பெருமூச்சுக்களும்
உலகின் எந்த விடுதலைப் போராட்டத்திலாவது, சகோதர இயக்கங்களின் தலைவர்கள் குறிவைத்துக் கொல்லப்பட்டிருக்கிறார்களா?
இப்படி பல இயக்கங்கள் உள்ளபடியால் தான் இன்னும் பாலஸ்தீனத்தில் பிரச்சினை தீரவில்லை. சோமாலியாவிலும் தீரவில்லை. ஒரு ஆங்கில பத்திரிகையில் எழுதப்படுகிறது: சமாதான பேச்சுவார்த்தை எதைப் பற்றியது என்பதில்கூட ஒரு இணக்கப்பாடு காணப்படாமல் இருக்கிறது. ஒரு தரப்பிற்கு இப்படி ஒரு இணக்கப்பாடே காணமுடியாவிட்டால், எதிர்த்தரப்போடு சமதானப் பேச்சுவர்த்தையை மேற்கொண்டு செல்ல முடியாது. ஒரு இயக்கம் சமாதானம் என்றால், மற்றயது போர். ஒரு இயக்கம் 3 நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டால் மற்றயது ஒன்றுக்குமே ஒப்புக்கொள்ள மாட்டுது. இந்த இழுபறி நிலை தமிழீழத்தில் வராமல் இருந்ததால் தான் நாங்கள் இன்னும் பலமாக உள்ளோம். பங்குப் பெண்டாட்டி புழுத்துச் செத்தாளாம் என்ற கதையாகி விடக்கூடாது.
தலைமை என்கிற பெயரில் ஒருவர் மட்டுமே இருக்க வேண்டும் என்கிற நிலைமை வேறு விடுதலை இயக்கங்களில் இருந்திருக்கிறதா?
ஒருவர் என்று இருந்தால் அதில் தப்பேதும் இல்லையே. தலைவரின் வழிகாட்டலில் இன்று நாம் எவ்வளவோ முன்னேறி விட்டோமே. தனி நாடு உருவாகட்டும், எங்கள் முழுப்பலமும் தெரியவரும்.
எந்த எதிரியிடம் இருந்து விடுதலை தேவையோ அந்த எதிரியின் தலைவர் பொறுப்புகளில் இருப்பவர்களை மட்டுமே குறி வைத்து வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதுண்டா?
தலைவர்கள் தான் தீர்வைத் தரக்கூடியவர்கள். அவர்களே எதிரியாக இருக்கும்போது வேறு என்ன செய்வது. இனி வருபவராவது சிந்திக்கட்டும்.
தனக்கு உதவ வாய்ப்பு இருக்கும் நிலையில் உள்ள ஒருவர் எதிராகச் செயல்படுகிறார் என்று தெரிந்த மாத்திரத்தில் அவருக்கு வேண்டியவர்கள் மூலம் சரியான வகையில் அவருக்குப் புரிய வைத்து தனக்கு சாதகமாகத் திருப்பிக் கொள்ளும் முயற்சி அற்று அவரையே தீர்த்து விடும் திட்டங்கள் செயல்படுத்தப் படுவதுண்டா?
இது எமது தனித்துவத்தைக் காட்டுகிறது. உதவி செய்வார் என்று அவர் சொல்படி ஆட பொம்மைகள் அல்ல நாம். உதவி என்ற பெயரில் வந்து உவத்திரம் தந்த கதை தான் மிச்சம்.
இனவிடுதலைக்கான போராட்டத்தில் தனிமனித இழப்புகள் தவிர்க்க இயலாதவை என்கிற முதிர்ச்சியான போராட்ட நிலையில் இருந்து, இப்போது நடக்கும் போராட்டம் தனிமனிதப் பழிவாங்கல்களின் தொகுப்பு என்கிற நிலைக்கு இறங்கி விட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறதா இல்லையா?
இதை நான் முற்றுமுழுதாக எதிர்க்கிறேன். தமிழீழப் போராட்டத்தில் தனிமனித பழிவாங்கல் என்று எதுவும் இல்லை. தலைவரை எதிர்த்தால் அவரைக் கொன்றால் அது தனி மனித பழிவாங்கலாகாது. எங்களின் தலைவரை எதிர்த்தால், எங்களை எதிர்த்தது தானே? எங்களோடு பிரச்சினை இல்லை, தலைவரோடு தான் பிரச்சினை என்று இருக்க முடியுமா? எங்கள் தலைவர் எங்களுக்குக் கிடைத்த அவதாரம். கிருஷ்ணன் மகாபாரதப் போரில் எவ்வாறு நடந்துகொண்டார் என்பது எல்லோரும் அறிந்ததே. இராமன் அன்றைய யுத்த தர்மப்படி மிகவும் கேவலமான விடயம் தானே மறைந்திருந்து வாலி மீது அம்பெய்து கொல்வது? அன்று கிருஷ்ணன் எவ்வாறு குழறுபடி செய்தாவது தர்மத்தை நிலைநாட்ட வேண்டுமென்று முயற்சித்தாரோ அவ்வாறே எங்கள் தலைவரும். ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு என்பது போல், என்ன தில்லுமுல்லு பண்ணினாலும், தாகம் தமிழீழத் தாயகமாகவே இருக்கிறது.
எதிர்கால நாளில் ஜனநாயக சிந்தனைக்கு இடம் இருக்குமா? “ஈழத்தமிழர் தான் விடுதலைப்புலிகள்; விடுதலைப்புலிகள் தான் ஈழத் தமிழர்” என்றொரு நிலை உருவாகி இருப்பது எதிர்கால ஆரோக்கிய சமூகத்துக்கு வித்திடும் விஷயம தானா?
இது விவாதிக்கக்கூடிய விடயம் தான். இருந்தாலும், பொது எதிரியை எதிர்கொள்வதை விட்டு நமக்குள்ளேயே அடிபட்டுக்கொள்வது அடி முட்டாள்த் தனம். இராக்கில், முசுலிம்கள் பிழவுபட்டு தங்களுக்குள்ளேயே மசூதிகளிலும், சந்தைகளிலும் குண்டை வத்து கொன்று பழிதீர்ப்பதைப் போல் ஆகிவிடும்.
தலைவர் எது செய்தாலும் தமிழர்களுக்கு நன்மையாகவே செய்வார். அவர் தனி நாடு கோரிக்கையை கைவிட்டு federalism இற்கு ஒப்புக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியபோதும் நாங்கள் அவர் பின் நின்றோம். தலைவர் காலம் வரை தப்புக்கள் நடக்காமல் இருக்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. அவர் காலத்திலேயே தமிழீழம் உருவாக்கப்பட்டு ஒரு பொதுவான அரசியல் கட்டமைப்பு உருவாக்குவார் என்பதில் நம்பிக்கையோடு இருக்கிறோம். இவ்வளவத்திற்கும் அவை வரையப்பட்டிருக்கும். எப்போது தமிழீழம் முழுமையாக அரசாளக்கூடியவாறு உருவாக்கப்படுகிறதோ அப்போது அவை அறிவிக்கப்படும்.