India,  Internet,  Tamil Unicode

தமிழ் ஒருங்குறி ?! – 17

ஒரு சட்டம், வரையறை, கோட்பாடு இயற்றுவதில் வெள்ளைக்காரன் கெட்டிக்காரன் தான். ஏனெனில், அவன் மற்ற இனத்தவர்களை விட இவைகளை இயற்ற முதலில் எத்தணித்தவன். ஆகவே, அவனுக்கு பல முறை முட்டி மோதி, பல முறை மேம்படுத்தி பழக்கப்பட்டவன். இன்றும், கையில் அதிகாரம் இருந்தால் கூட களவு செய்ய முடியாதபடி (அ) செய்தாலும் பிடிபடும்படி நுணுக்கமாக ஒரு கட்டமைப்பை உருவாக்கி இருப்பதால் தான், கடையின் சொந்தக் காரன் வீட்டில் இருக்க வேலைக்காரன் கல்லாவில் அமர்ந்தாலும் கடை நஷ்டத்தில் போவதில்லை.

ஆகவே, ஒருங்குறி அமைப்பின் சட்ட திட்டங்கள் சரியானதாகவே இருக்கலாம். ஒருங்குறி ஒரு உலக மொழி ஒருங்கமைப்பு என்ற ரீதியில் நோக்குவோமானால் அவர்களின் சட்ட திட்டங்கள் மிகச் சரியானவையே. அதையே, தமிழை மட்டும் பார்த்தால், தமிழுக்கு விவேகக் குறைவே. இருந்தாலும் தமிழை மட்டும் அவர்களால் பார்க்க இயலாது. ஆகவே அவர்கள் நிலைப்பாடு சரியானதே.

இதில் இருந்து என்ன கற்றுக்கொள்ள வேண்டிய விடயம்? இனிமேலாவது தமிழ் மொழியை யாரும் பார்த்துக்கொள்வார்கள் என்று விடாமல், நாம் தாம் நம் மொழியின் முன்னேற்றத்திற்கு உழைக்க வேண்டும். இதை தமிழர்கள் உணர்வார்களா என்பது கேள்விக்குறி.

ஒருங்குறி உதவி வருங்காலத்தில் சகல மென்பொருளிலும் வழங்கப்படும். அதில் ஐயமில்லை. ஆதலால், எதிர்காலத்தில் தமிழுக்கு பிரச்சனை இருக்காது. ஆனால், மற்றய இடர்களான இடம், வேகம் என்பன இருந்து கொண்டே தான் இருக்கும்.என்னதான் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தாலும், இன்னமும் பலருக்கு கணினியே கிட்டாத நிலை தானே நிலவுகிறது. அப்படியாயின், ஒருங்குறி வேலை செய்யக்கூடிய கணினி கிட்ட இன்னும் எத்தனை காலம் எடுக்கும் என்பதை எதிர்காலம் பதில் சொல்லும். இவ்வளவு காலமும் தமிழுக்கு ஒரு பின்னடைவே. மற்றய மொழிகள் வளர்ந்து கொண்டு வருகையில் தமிழ் மிக மெதுவாகவே துளிர்க்கிறது. இணைய முகவரி 255 எழுத்துக்களுக்குள் இருத்தல் வேண்டும். தமிழில் இணைய முகவரி வைத்தால் இந்த கட்டுப்பாட்டை இலகுவாக தாண்டும். இதை இப்போதே சில வலைப்பதிவாளர்களின் இடுகைகளில் கவனிக்கலாம். மேலதிக எழுத்துக்கள் வெட்டப்படுவதால் ஒழுங்காக வேலை செய்யாமல் போய்விடும். [மேலும் அறிய இடுகைகளில் தமிழில் தலைப்பு வைக்கும்போது கவனிக்கப்பட வேண்டியவை] இதை சரி செய்ய இன்னும் கொஞ்ச காலம் அதிகமாக தேவை. போராடிப் போராடியே பழக்கப்பட்டவர்கள் நாம். இதில் தோற்று விடுவோமா என்ன?

என்னைப் பொறுத்த மட்டில் இந்திய அரசாங்கம் இனிமேல் எந்த மாற்று கருத்துக்களையும் ஒருங்குறி அமைப்புக்கு எடுத்துச் செல்ல ஆதரவளிக்காது. அரசே ஆதரவளிக்காத போது ஒருங்குறி அமைப்பும் அதற்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்போவது இல்லை. எப்பவும் பட்ட பின் தானே தமிழனுக்கு ஞானம் வரும்.

இருந்தாலும், தமிழின் மேம்பட்ட வடிவமைப்பை இன்று செய்து வைத்திருந்தால், எதிர்காலத்தில் உதவலாம் தானே. இனிமேல் எதாவது ஒரு அமைப்பு புதிதாக ஒரு முயற்சி செய்தால், அதற்கு தமிழை சரியாக, மிக மேன்மையானதாக வளங்கக்கூடியதாக நாங்களே முயற்சி செய்ய வேண்டும். அடுத்த முறையும் தவறினால், “குட்டக் குட்டக் குனிபவன் மொக்கன்” என்ற கதையாகிவிடும்.

<< பாகம் – 16

One Comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image

© 2023 - All Right Reserved. | Adadaa logo