Government,  Government of Tamil Eelam

கனடா + கியூபெக் [ஃபிரெஞ்சு மாகாணம்]

சகலருக்கும் சமத்துவம். எதிலும் நீங்கள் போட்டியிடலாம். சாதிப் பிரச்சனை இல்லை. எவரும் படிக்கலாம். உங்கள் திறனுக்கே இங்கு முக்கியத்துவம். நடுத்தர குடும்பம் (அ) தாழ்த்தப்பட்ட சாதிக்கு இவ்வளவு விகிதம் என்று எதுவும் கிடையாது.

ஒரு சாதி குறைந்த வெள்ளக்காரனுக்கும், சாதி கூடிய வெள்ளைக்கரனுக்கும் என்ற பிரச்சினை இல்லை. நிற வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், தமிழர்களைப் போல் வெள்ளைக்காரனுக்குள்ளையே பிரித்துப் பார்பது இல்லை. கீழ்ச் சாதி மேல் சாதி எல்லாம் நமக்குளே தானே. “discrimination against designated groups, usually in the area of employment.” இது வந்து இங்கு பெண்கள், வலது குறைந்தோர், ஓரினச் சேர்க்கை புரி வோர் என்று வெள்ளையர்களிடம் பாகுபாடு செய்தல் என்பதற்காகத் தான். அதற்காகக் கூட, இத்தனை விகிதம், இந்த group ஐ சேர்ந்தோர் இங்கு இருத்தல் வேண்டும் என்று எந்த சட்டமும் கிடையாது.

நீங்கள் சொல்வது போல், ஒரு தாழ்த்தப்பட்ட சாதிக்காரன், விகிதாசாரப்படி பல்கலைக் கழகம் புகுந்து, படித்து ஒரு வைத்தியனாகவோ, (அ) அதற்கு மேலாகவோ வருகிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனது சமூக அந்தஸ்து, உயர்ந்து விட்டது. ஆனால், அவனுடைய பிள்ளையை பாடசாலையில் சேர்க்கும் போதோ, வேலையில் சேர்க்கும் போதோ, எந்த சாதி என்ற கேள்வி விண்ணப்பப் படிவத்தில் இருந்தால், அவன் அந்த சாதியை விட்டு மீழ்வது எங்கனம்?

கனடா பாடசாலை விண்ணப்பப் படிவத்தில் எந்த சாதி என்று கேட்பதில்லை. ஒவ்வொருவரும் தத்தம் வழி. மற்றவன் பிரச்சினையில் மூக்கை நுளைக்கமாட்டார்கள். சந்தோசமாக வாழ வேண்டும் என்பதில் இங்கு எல்லோருக்கும் ஆவல். ஒரு நாளில், பாதி நேரத்தை சந்தோசமாக செலவழிப்பதிலேயே செலவிடுகிறார்கள். பணக்காரன் ஆவது அல்ல அவர்கள் குறிக்கோள்.

என்னைப் பொறுத்த வரையில், சாதி குறைந்தோருக்கு இவ்வளவு சதவிகிதம் என்று சொல்வதால், அரசாங்கமே அவர்களை சாதி குறைந்தோராக காட்டிக் கொடுக்கிறதே!

ஆனால் ஒன்று, வெள்ளையனிடம் தனி நபர் சுதந்திரம் முக்கியமாக கருதப்படுகிறது. நம் நாட்டவரில், சொந்தம், உற்றார், உறவினர் என்று ஒரு கூட்டு சுதந்திரமாக பார்க்கிறோம். நன்மையும் உண்டு, தீமையும் உண்டு.

சின்ன உ+ம்: சிறு பிள்ளையை வீதியால் கொண்டுபோகும்போது, நம்மவர்கள் பிள்ளையை கையில் பிடித்துக்கொண்டு பத்திரமாக அழைத்துச் செல்வார்கள். ஏன் அனேகமானவர்கள் தூக்கித் தான் செல்வார்கள். ஆனால் வெள்ளையர்கள், எவ்வளவு நேரமெடுத்தாலும், நடத்தியே செல்வார்கள். கையைக் கூடப் பிடிக்க மாட்டார்கள். மிகவும் சிறு பிள்ளை என்றால் விரலைக் கொடுப்பார்கள். அவர்கள் சொல்லும் விளக்கம் என்னவென்றால், சிறு வயதிலேயே அப் பிள்ளைக்கு தன் மீது நம்பிக்கை வர வேண்டுமாம். தன்னால் தனியாகவும் பாதுகாப்பாகவும் நடக்க இயலும் என்ற நம்பிக்கை வரவேண்டுமாம். இது தான் அவர்களின் தனி நபர் முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்கிறதென்று நம்புகின்றேன்.

கனடாவின் ஒரு மாகாணம் ஃபிரஞ்சு மொழி பேசும் மக்கள் அதிகமாக வாழும் மாகாணம். அந்த ஒரு மாகாணத்திற்காக, ஏனைய 9 மாகாணங்களும் [including economic power Ontario], 3 territories எல்லாம் ஃபிரஞ்சையும் அங்கீகரிக்க வைத்திருக்கிறது கியூபெக் மாகாணம். சும்மா பேச்சளவில், கொடுத்தேன் என்று இல்லாமல், கனடாவின் நடுவண் அரசாங்கத்தின் அனேகமான வேலைகளிற்கு ஃபிரஞ்சு மொழி அவசியம். அவர்கள் ஒரு பரீட்சை கூட வைப்பார்கள். இங்கே ஒரு பேச்சு அடிபடுகிறது. வருங்காலத்தில், கனடா அரசாங்கம் முழுக்க ஃபிரஞ்சு மக்களாலேயே ஆகிவிடும் என்று.

இது பத்தாதென்று அவர்கள் மேலும் பல சலுகைகள், பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெற்றிருக்கிறார்கள். Media வில் அவர்கள் தங்கள் மாகாணத்தை ஒரு நாடாக கருதியே செய்திகள் வெளியிடுவார்கள். மற்றய நாடுகளுடன் தங்கள் மாகாணத்தையும் ஏதோ இன்னொரு நாடு போல் தான் ஒப்பீடு பண்ணுவார்கள். ஏன் ஃபிரஞ்சு புத்தகங்களில், மாகாணம் என்று இல்லாமல் தனி நாடென்றே எழுதப்பட்டிருக்கும். இதற்கெல்லாம், கனடா அரசாங்கம் சலுகைகள் கொடுத்திருக்கின்றது.

எந்த ஒரு பாராளுமன்ற முடிவு எடுக்கப்பட்டாலும் கியூபெக் இற்கு என்று ஒரு தனி சலுகையைப் பெற்று விடுவார்கள். அவர்கள் மாகாணத்தில் அங்காடிகள் என்று எல்லாம் ஃபிரஞ்சு மொழியில் பெரிதாகவும், ஏனைய மொழிகளில் [ஆங்கிலம் உட்பட], சிறிதாகவே இருக்க வேண்டும். பல்கலைக்கழகத்திலும் ஃபிரஞ்சு மொழி கட்டாயப் பாடம். பேரூந்து ஓட்டுனரிலிருந்து காவல்துறை மட்டும், நீங்கள் ஃபிரஞ்சு மொழியில் பேசினால் உங்களுக்கு சாதகமாக அவர்கள் நடப்பார்கள். 50 தொழிலாளிகளுக்கு மேற்பட்ட நபர்களைக் கொண்ட அனைத்து வர்த்தக நிலையங்களிலும் அவர்களது கணினி பிரஞ்சு மொழியிலேயே இருத்தல் வேண்டும் என்பது இங்கத்தைய சட்டம்.

அவ்வளவு ஏன், அரச உதவி பெறும் வானொலிகளில் மூன்று பாடல்கள் ஒலிபரப்பினால், 2 பாடல்கள் ஃபிரஞ்சு மொழிலேயே இருத்தல் வேண்டும். கனடாவில் வைத்தியசாலைகள் தனியார் மயம் இல்லை. ஆனால், கியூபெக் இல் தற்போது சில சத்திர சிகிச்சைகள் தனியாரால் செய்யப்படக்கூடியவாறு வந்திருக்கிறது. மற்ற மாகாணங்களில் இவ்வாறு இல்லை. கனடாவில் இருப்பவர்கள் தங்கள் உற்றார் உறவினர்களை இங்கு வரவழைத்து தங்க வைக்க முடியும் [sponsor]. கியூபெக் மாகாண அரசும் ஒரு தேர்வு நடத்தி அதில் தெரிவுசெய்யப்பட்டவர் தான் பின் கனடா அரசாங்கத்தாலும் தெரிவுசெய்யப்படுவார். இப்படிப்பட்ட சலுகைகள் கியூபெக் மாகாணத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது.

இப்படி கியூபெக்கிற்கு ஒரு விசேட சலுகை கொடுக்கப்படுதே என்று எந்த ஒரு எதிர்க்கட்சியும் போராட்டத்தில் இறங்கியது இல்லை. கியூபெக் மாகாணத்திற்கு அதிக சலுகை கொடுக்கப்படுகிறது; கனடாவில் அந்த மாகாணத்திற்கு மட்டும் இப்படி சலுகைகள் கொடுப்பது நியாயமில்லை என்று ஒரு வேற்றுமையை ஆங்கில மக்களிடையே உருவாக்கி வாக்குகளை கொள்ளை அடிக்கலாம் என்று எந்த ஆங்கில அரசியல்வாதியும் செய்ததில்லை. நாடு பிரியக் கூடாது என்ற ஒரே நோக்கத்தில் அடக்குமுறையைக் கையாழாமல், தங்களை விட மேலதிக சலுகைகளைக் கொடுத்து அகிம்சையை உண்மையில் இன்றைய கால கட்டத்தில் கடைப்பிடிக்கிறார்ககள்.  ஆங்கில அரசியல்வாதிகள் அந்த சலுகைகளை ஒரு அத்தியாவசியம் என்றே பார்க்கிறார்கள். ஆங்கில மக்கள் இதுவரைக்கும் கியூபெக் இற்கு எதிராக கிளர்ந்தெழுந்தது இல்லை.

இவ்வளவு கொடுத்தும், அவர்கள் பத்தாது எங்களுக்கு தனி நாடு வேண்டும் என்று இரு தடவை தேர்தல் வைத்து, அரும்பொட்டில் பிரியாமல் இருக்கிறார்கள். என்ன வியற்பாக இருக்கிறதா?

இதில் கவனிக்கப்பட வேண்டிய விடையம் என்னவென்றால் இது இவர்கள் நாடே இல்லை. கனடா, அமெரிக்கா எல்லாம் வெள்ளையனின் தேசமே இல்லை. வந்தேறு குடிகள், தங்கள் மொழியை பிரதான மொழியாக சட்டமேற்றியது. ஆதி வாசிகள், இன்றும் சமூக சீர்கேடுகளால் அழிந்து கொண்டுதான் இருக்கிறார்கள் இங்கே. ஆதி வாசிகளுக்கு சும்மா இருக்க பணம் கொடுக்கிறார்கள். அவர்கள் முன்னேறக்கூடாது என்று எண்ணியோ என்னவோ. இதே போல் தான் அமெரிக்காவிலும், ஸ்பானிய மொழி பேசுபவர்கள் இருந்தாலும் ஆங்கிலம் தான் அரச மொழி.

ஃபிரஞ்சு மொழிக்காரர் அவர்கள் மொழி மேல் கொண்ட பற்றளவு, தமிழருக்கு இல்லை என்றே தோன்றுகிறது.

_____
CAPital

One Comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image