LTTE,  War,  War of Tamil Eelam

கரும்புலித் தாக்குதல் தப்பா?

ஐயா… போர் என்று வந்தால், நியாயமான போர் அனியாயமான் போர் என்று இருக்கிறதா?

போரில் எதிரியை துவம்சம் செய்வதுதான் குறிக்கோள், அது எந்த வழியானாலும்.

புலிகள் மறைந்திருந்து தான் தாக்குகிறார்கள். இலங்கை இராணுவம் மட்டும் அந்தக் காலத்தில் போர் புரிவது போல் ஒர் அறிக்கை விட்டு, இந்த இடத்தில் தான் போர் நடக்கும் என்று தெரிவித்து, அந்த நேரத்திற்கு அங்கு சென்று, ஒழுங்கு வரிசையாக நின்று தலைவனின் கட்டளையின் பின் ஒவ்வொரு படையாக எதிரி நோக்கி சுட்டு, பின் அந்த படை நிற்க எதிரி படை சுட ஒரு நேரம் கொடுத்து, அவர்கள் சுடவும் ஓடி ஒழியாமல் அந்த இடத்திலேயே இருந்து சூடு வாங்கி இறக்க, எஞ்சி உள்ள படை திரும்பவும் தங்களை ஒழுங்குபடுத்தி வரிசையாக நின்று மீண்டும் எதிரி மீது தலைவனின் கட்டளையின் பின் சுட்டு… இப்படி மாறி மாறி நடக்குமானால் போரில் நியாயம், அனியாயம் பற்றிக் கதைக்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் எந்த இராணுவமும் இப்படி செய்வது இல்லை. தற்கொலைத் தாக்குதல் நியாயமில்லை என்று சொல்பவர்கள் எந்தப் போரிலாவது நியாயமாக போரிட்டுள்ளார்களா?

அன்று அம்பும் வில்லும் வைத்து சண்டை பிடித்த ஆதிவாசிகளை துப்பாக்கி வைத்து ஒழிந்திருந்து கொல்லவில்லையா? அப்படி எத்தனை பேரரசுகள் எத்தனை இறையாண்மை உள்ள நாடுகளை ஆக்கிரமித்து ஆண்டாண்டு காலம் ஆண்டிருக்கின்றன? அன்று கோழைத்தனம் என்று சொல்லப்பட்டது இன்று வீரத்தனம் என்று மெச்சப்படுகிறது. இன்று இராணுவம் இப்படி சண்டைபிடிக்கிறது; எதிர்காலத்தில் கெரில்லா தாக்குதல் தான் போர்.

எதிரி வெறும் கைத்துப்பாக்கி தான் வைத்திருக்கிறான், நானோ இயந்திரத் துப்பாக்கி வைத்திருக்கிறேன். அதனால், அவனை நான் கொல்வது நீதியாகாது என்று எந்த இராணுவமாவது விட்டிருக்கிறதா? எதிரி வெறும் இராணுவ வாகனத்தில் நிற்கிறான், நான் பீரங்கி பொருத்திய வாகனத்தில் நிற்கிறேன் அதனால் அவனை கொல்வது நியாயமில்லை என்று எந்த இராணுவமாவது விட்டிருக்கிறதா? எதிரி தரையில் துப்பாக்கியுடன் நிற்கிறான் நானோ ஆகாயத்தில் மிகவும் பாதுகாப்பாக உலங்கு வானூர்தியிலோ (helicopter) (அ) போர் விமானத்திலோ நிற்கிறேன்; அதனால், அவனை கொல்வது அநீதியாகும் என்று எந்த இராணுவமாவது விட்டிருக்கிறதா? அப்படி விட்டால் தான் எதிரி விடுவானா? ஆகவே கொல்ல எடுக்கும் ஆயுதம் ஒரு காரணியாக எந்த இராணுவத்தாலும் அன்றிலிருந்து இன்றுவரை எடுத்துக்கொள்ளப்படவில்லை.

கெரில்லா தாக்குதல் ஒன்றை மட்டும் உணர்த்துகிறது. எதிர் காலத்தில் எந்த நாடும் எந்த ஒரு நாட்டையும் ஆக்கிரமித்து ஆளமுடியாது. இதை உணர்ந்தால் எந்த ஒரு அரசும் வேறோர் பிரதேசத்திற்கு ஆயுதங்களுடன் இராணுவம் அனுப்பாது.

சரி ஆயுதங்கள் எதற்காக உற்பத்தி செய்யப்படுகின்றன? ஒரு உயிரை தூர இருந்து [பாதுகாப்பாக] மிக துல்லியமாக, மிக வேகமாக, மிக சேதம் கொடுக்கவல்லனவாக இருக்கவே. அப்படியாயின் இந்த ஆயுதம் நன்று அந்த ஆயுதம் இல்லை என்று சொல்ல முடியாது. எல்லா ஆயுதமும் உயிரை எடுக்கவே அன்றி உயிரை சிறைப்பிடிக்க அல்ல.

கொல்ல என்று வந்த பின் எதனால் கொன்றால் என்ன? துப்பாக்கியால் என்னோர் உயிரைக் கொல்வது நியாயம்; கைக்குண்டை எறிந்து உயிர்களைக் கொல்வது நியாயம்; உலங்கு வானூர்தியில் பாதுகாப்பாக மேலிருந்து கீழ் நோக்கி சுட்டுக் கொல்வது நியாயம்; விமானத்தில் பாதுகாப்பாக வந்து குண்டு போட்டு அந்த குண்டு வெடித்த சத்தம் கேட்கமுன்னரே அந்த இடத்தை விட்டு போவது நியாயம்; அணுகுண்டு போட்டு ஒரு பரந்த பிரதேசமே நாசமாக்குவது நியாயம். ஆகவே ஓர் உயிரைக் கொல்ல மற்றோர் உயிர் காரணமாக இருக்கிறது. இதையே ஓர் உயிர் மற்றய உயிரைக் கொன்றால் [தற்கொலை தாக்குதல்] தப்பா?

உலக நாடுகள் ஏன் ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள்? எங்கே உலக நாடுகள் எல்லாம் இனி ஆயுதங்களை ஒழிப்போம் என்று தங்களிடம் இருக்கும் ஆயுதங்களை இல்லாதொழிக்கட்டும்.

“தலைக்கு மேல் வெள்ளம் வந்தால் பிறகு, சாண் என்ன முழம் என்ன”
கொல்ல என்று முடிவெடுத்தாற் பின் ஆயுதத்தால் கொன்றால் என்ன தற்கொலையால் கொன்றால் என்ன.

துப்பாக்கியால் சுட்டுக் கொல்லலாம், போர் விமானத்திலிருந்து குண்டு போட்டுக் கொல்லலாம், ஆனால் தற்கொலைதாரியாக குண்டை வெடிக்கவைத்தால் நியாயம் இல்லை எனலாமா? துப்பாக்கியால் சுடுவது ஏதோ எதிரியை மட்டும் தான் சுடுகிறான் என்றே வைத்துக்கொள்வோம். ஆனால், எறிகணைகளை வீசிக் கொல்வதும் உலங்கு வானூர்தியில் பறந்து சுட்டுக் கொல்வதும், போர் விமானத்தில் இருந்து பாரமான குண்டைப்போட்டு கொல்வதும் எதிரியை மட்டும் தான் என்று சொல்ல முடியாது. “நியாயமான” இராணுவம் என்ன சொல்கிறது? எதிரிகள் அந்த கோவிலிலிருந்து, பாடசாலையிலிருந்து, (அ) கட்டிடத்திலிருந்து தாக்கினார்கள். அவர்களை கொல்லவே அந்த கட்டிடத்தில் நாங்கள் பாரிய குண்டைப் போட்டு ஒட்டு மொத்த கட்டிடத்தையும் நாசம் செய்தோம். அதே கட்டிடத்தில் இருந்த அப்பாவி மக்கள் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. எதிரியைக் கொல்லவேண்டும் என்பது தான் நோக்கம்; அது எவ்வாறான விலையைக் கொடுத்தாவது. சில பொதுமக்கள் இறந்தாலும் எதிரி கொல்லப்படவேண்டும். இதைத்தானே “நியாயமான” இராணுவம் செய்கிறது. உண்மையைச் சொன்னால், எந்த இராணுவமும் எறிகணை, பீரங்கி, உலங்கு வானூர்தி, போர் விமானம் போன்றவற்றை கொல்வதற்கு பயன்படுத்தக்கூடாது. ஆனால், அதையெல்லாம் செய்யும் இந்த “நியாயமான” இராணுவம் தற்கொலை குண்டை “அநியாகம்” என்று சாடுகிறார்கள்.

இராணுவத்தில் சேரும்போதே மரணிக்க துணிந்துவிட்டான் என்று தானே பொருள். இன்னுமோர் உயிரைக் கொல்லும் முயற்சியில் உன் உயிரும் எடுக்கப்படலாம். அதையே இன்னுமோர் உயிரைக் கொல்லும் முயற்சியில் நிச்சயமாக உன் உயிரும் போகும் என்று தெரிந்து துணிவது விபரிக்க முடியாத துணிவு.

பலர் மொழிக்காக, மதத்திற்காக, நாட்டுக்காக தீக்குளிக்கவில்லையா. அவர்களையெல்லாம் இழிவாக பேசுவது நியாயமாகுமா?

தாய் தன் பிள்ளைக்காக உயிர் துறக்கலாம், தந்தை பிள்ளைக்காக உயிர் துறக்கலாம்; ஆனால், என்னுயிர் கொடுத்து உன் உயிர் காப்பேன் என்று எந்த சொந்த பந்தமும் அற்றவர்கள் விலைமதிப்பற்ற தங்கள் உயிர்களை தியாகம் செய்வது மிகவும் மதிப்பிற்குரியதேயன்றி, கண்டனத்துக்கிரியதல்ல.

ஆண்டாண்டாக போரில் வீரர்களின் சேர்க்கை மாறி இருக்கிறது; போர்நெறி மாறி இருக்கிறது; ஆயுதத் தெரிவு மாறியிருக்கிறது. கல்லோடு போரிட்டவன், பின் அம்பும் வில்லும் கொண்டவன், வெறும் துப்பாக்கியால் சுடப்பழகியவன், இன்று மிக சக்திவாய்ந்த ஆயுதங்களுடன் போருடும் இந்த போரின் பரிணாம வளர்ச்சியில் கரும்புலிகளும் ஓர் அம்சமே.

“மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காக தன்னை இல்லாதொழிக்க துணிவது தெய்வீகத் துறவறம். அந்த தெய்வீக பிறவிகள் தான் கரும்புலிகள்.” – மேதகு வே. பிரபாகரன்

_____
CAPital

3 Comments

  • chandransblog

    அருமையான வாதம். போரென்று வந்து விட்டால் என்னவும் செய்யலாம், எப்படியும் நடந்து கொள்ளலாம்.

    ஆக, ஹிட்லர் போன்றோர் எல்லாம் வீரர்களே!

    இதே சித்தாந்தத்தை வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் பயன் படுத்தலாமே! தற்கொலை என்பது எல்லா நிலைகளிலும் குற்றமாகத்தானே கருதப்படுகிறது.

  • CAPitalZ

    முதலில் உங்கள் வரவிற்கும், பின்னூட்டத்திற்கும் நன்றிகள் பல.

    வாழ்க்கையில் கொலை என்பது எல்லா நிலைகளிலும் குற்றமாகத் தானே கருதப்படுகிறது. அப்புறம் ஏன் ஒரு அரசாங்கம் செய்வது அப்படிப் பார்க்கப்படுவதில்லை? எத்தனை பேர் இராணுவத்தால் போர்களிலும், காவல்துறையால் குற்றவாளியை பிடிக்கும்போதும், அரசாங்க பிரமுகர்களால் தூக்குத் தண்டனையாகவும் கொல்லப்படுகிறார்கள். அப்போது மட்டும் நியாயம் என்று ஏன் ஆமோதிக்கிறார்கள்?

    ______
    CAPital

  • விக்ரம்

    நல்ல வாதம். இன்று அரசாங்கம் செய்தால் எதற்கும் பெயர் ஆட்சி, கட்டுப்பாடு, பாதுகாப்பு. ஆனால் அவற்றையே மற்றோர் செய்தால் அராஜகம், அடக்குமுறை, பயங்கரவாதம்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image

© 2024 - All Right Reserved. | Adadaa logo