தமிழீழ அரசு நோக்கிய பயணம்
சிலர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும், தமிழ் மக்களுக்கும் உள்ள பலத்த நேயத்தைப் பிரிக்கும் விதமாக பல சந்தேக குதர்க்கங்களை கட்டுரையாக எழுதுகிறார்கள். இதை எழுதுபவர்களும், வாசிப்பவர்களும் தலைவர் சொன்னால் தான் செய்யவேண்டும் என்று சொல்லிக்கொண்டு மேலும் மேலும் தமிழர்களைப் பிரிக்கிறார்கள். இப்படியான கட்டுரைகளை தயவுசெய்து எழுதாதீர்கள். புதினம் இணையத்தளம் புலிகளின் உத்தியோகபூர்வ இணையத்தளம்; TamilNet.com ஆங்கிலத்திலும், புதினம் தமிழிலும்.
தலைவர் இருக்கிறாரா, இல்லையா என்று ஆராய்வதை விடுங்கள். அவர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர் வழிகாட்டிய பாதையை நாம் செவ்வனே செய்யவேண்டும். இல்லையென்று சொல்லிகொண்டு சோர்ந்துபோய் விடுவதும்… இருக்கின்றார் என்று சொல்லிக்கொண்டு வரும்வரைக்கும் காத்துக் கொண்டிருப்பதும்… தான் தமிழ்த்தேசியம் உருவாகுவதைத் தடுக்கும் சக்திகளுக்கு அல்வா சாப்பிடுவது போன்றதாகும். இதைத் தான் இலங்கை/ இந்திய அரசு எதிர்பார்த்து நிற்கிறது. நீங்களும் இந்திய “றோ” பிரிக்கும் வலையில் விழுந்துவிடாதீர்கள்; மற்றவர்களையும் விழுத்தாதீர்கள். நீங்கள் தலைவர் உயிருடன் இருக்கிறார் என்று நம்புவராக இருக்கலாம்; அல்லது அவர் உண்மையில் இறந்துவிட்டார் என்று நம்புவராக இருக்கலாம். உங்கள் நம்பிக்கை எதுவாயினும் தற்போது தமிழீழம் வென்றெடுக்க தேவையான கடமைகளை நீங்கள் செய்யாமல் சோர்ந்து போகாதீர்கள். தலைவரின் வழிகாட்டலில் தான் எல்லாமே நடந்தன, இப்போதும் அவரின் வழிகாட்டலில் தான் எல்லாமே நடந்துகொண்டிருக்கின்றன. நாம் செயற்படுவது தான் நாம் தலைவருக்கு செய்யும் கடன். எல்லாம் முடிந்துவிட்டது இனிமேல் ஒன்றும் செய்ய இயலாது என்று சோர்ந்து போய்விடாதீர்கள்.
செல்வராசா பத்மநாதன், தலைவர் உயிருடன் இருக்கும்போதே நியமிக்கப்பட்டவர். தலைவர் நியமித்தவரை நாம் அவதூராக பேசுவது தலைவரின் சொல்லுக்கு நாம் மதிப்புக்கொடுக்கவில்லை என்று தானே அர்த்தம். அவரை பிடித்துத் தரச்சொல்லி இன்னும் இலங்கை மற்றய அரசாங்கங்களை வற்புறுத்தி வருகிறது. பத்மநாதன் அவர்களுக்கு இலங்கையில் ஒரு மந்திரி பதவி கொடுத்து இலங்கை காவல் காக்கவில்லை; கருணாவைப் போல்.
புலிகளின் அரசியல் பிரிவு, புலனாய்வுப் பிரிவு என்பன, தலைவர் இருக்கும் காலத்திலும் தாமாக அறிக்கைகள் விட்டவை தான். இது தமிழ்நாட்டு தமிழர்களுக்கு புதியவையாக இருக்கலாம். ஆனால், ஈழத்தமிழர்களுக்கு இவை புதியவை அல்ல. புலிகளின் பல அங்கங்களிலிருந்து அறிக்கைகள் அவ்வப்போது வருவனவே. அரசியல் துறை, பேச்சாளர், கடற்புலி தளபதி, வரலாற்று ஆசிரியர், படைத்தளபதிகள், இராணுவப் பேச்சாளர் என்று பலர் அவ்வப்போது அறிக்கைகள் விட்டவர்கள் தான். தலைவர் தான் தான் அறிக்கை விடவேண்டும் என்று ஒரு கட்டுப்பாடு போடாமல் புலிகளின் எல்லாத் துறையும் நன்று வளரவேண்டும் என்று விரும்பியவர்.
பத்மநாதன் காசு வேண்டி விட்டார்; பொய் சொல்லிவிட்டார்; ஏமாற்றிவிட்டார்; இலங்கை அரசால் வாங்கப்பட்டுவிட்டார்; இந்திய அரசால் வாங்கப்பட்டுவிட்டார் என்று ஏதாவது சொல்லி தற்போதைய காலத்தின் கட்டாய வேலைப்பாடுகளை குலையவைக்கவே தமிழ்த்தேசியத்திற்கு எதிரான சக்திகள் விரும்புகின்றன. தமிழர்கள் ஒற்றுமையாக தமிழ்த்தேசியத்தை வென்றெடுக்கும் முயற்சியில் இறங்கவேண்டுமே தவிர, செய்யப்படும் முயற்சிகளை குழப்பி, திசைதிருப்பி, பிரிப்பதாக இருக்கக் கூடாது.
தலைவர் மேதகு வே. பிரபாகன் ஒரு மகத்தான தலைவர் என்று நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டிய அவசியம் இல்லை. அவர் ஒரு தீர்க்கதரிசி. இவ்வளவு காலமும் அவர் என்ன செய்தாலும், அதில் ஏதோ ஒரு முறையான காரணம் இருக்கும் என்று நம்பியவர்கள், இப்போது மட்டும் ஏன் முரணாக பேசுகிறீர்கள். மகத்தான தலைவரின் கட்டளைகளை சிரமேற் கொண்டு செய்துமுடித்தவர்களின் நம்பிக்கை இப்போது மட்டும் வீணாகாது. தலைவரின் செயல்கள் சில சமயங்களில் தவறானதாகத் தெரிந்தாலும் அதன் உட்கருத்து மிக ஆளமாக இருக்கும். அதை எதிர்த்து முன்னுக்குப் பின் முரணாகக் கதைத்தல் என்பது துரோகத்திற்கு ஒத்த செயல்.
தலைவர் இறந்துவிட்டார், மற்றவர்கள் பொய் சொல்லுகிறார்கள் என்று எண்ணத் தெரிந்த உங்களுக்கு, தலைவர் தான் இறந்தால் அடுத்து என்ன செய்யவேண்டும் என்று ஒரு செயற்திட்டம் போடாமலா இருந்திருப்பார் என்று எண்ணத்தோன்றவில்லை. தலைவரின் கட்டளைகளுக்கு கொடுத்த அதே மதிப்பை இப்போதும் நாம் கொடுக்கக் கடமைப்பட்டுள்ளோம். அவரின் ஆலோசனைகளின் படிதான் பத்மநாதன் முதற்கொண்டு, புலனாய்வுத் துறை வரை செயற்படுகின்றன. தமிழீழம் உருவாகுவதற்கு அடுத்த கட்ட நகர்வை தலைவர் வகுத்துக்காட்டிய வழியில் தான் பத்மநாதன் முன்னெடுக்கிறார். அதைத் தான் புலிகளின் புலனாய்வுத் துறையும், தற்போது பத்மநாதன் எடுக்கும் முயற்சிக்கு கைகொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். தலைவரே நேரில் வந்து எனக்காக இதைச் செய்யுங்கள் என்று கேட்கவேகண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள், தலைவர் எப்போதுமே நேரில் கோரிக்கை விட்டது கிடையாது என்பதை மறந்துவிட்டார்கள். தலைவர் மற்றவர்கள் மூலமாகத் தான் தன் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார்.
தலைவர் உயிருடன் இருக்கிறார் என்று நம்புவர்கள், வருகிற மாவீரர் நாள் தலைவர் கதைப்பார் என்று எதிர்பார்த்து இருக்கிறார்கள். தலைவர் உயிருடன் இருந்தால் கூட மாவீரர் நாளில் தலைவர் வெளிவரமாட்டார், நாம் தலைவர் சொன்ன செயற்பாட்டை செய்து அவர் வெளியில் வர ஏதுவான சூழலை உருவாக்காவிட்டால். தலைவர் கொடுத்த வேலையை செய்தால் தானே தலைவர் வெளியில் வரத்தக்க சூழல் உருவாகும். அதன்பிறகு தானே அவர் வெளியில் வரலாம். நீங்கள் தலைவர் சொன்னால் தான் செய்வேன் என்று கிடப்பில் கிடந்தால், அந்த சூழல் உருவாகப்போவதில்லை; அவரும் வரமுடியாமல் தவிக்கவேண்டியது தான். இதில் கவனிக்கவேண்டிய ஒரு வரலாற்றுத் தகவல் என்னவென்றால், இந்தியா முன்பு தலைவரைக் கொன்றுவிட்டோம் என்று சொல்லி அறிவித்திருந்தது, இந்திய இராணுவ ஆக்கிரமிப்பின் போது. அப்போது கூட இல்லை நான் உயிருடன் தான் இருக்கிறேன் என்று அறிக்கை ஒன்றும் விடவில்லை. இன்னும் சொன்னப்போனால், மூன்று வருடங்களின் பின் தான் தலைவர் வெளிவந்தார்.
நாடு கடந்த தமிழீழ அரசு உருவாக்கவேண்டும் என்ற செயற்திறனை எல்லோரும் ஒட்டுமொத்தமாக செய்வோம். இனி வரும் செயற்திட்டங்களையும், முழுமனதுடன் நடத்திக்காட்டுவோம். தலைவரின் வழிகாட்டலை நாம் செய்து தலைவரின் நம்பிக்கையை நாம் கைவிடாமல் காப்பாற்றுவோமாக.