[தமிழ் நாடு பயணம்: 1]: கனடாவில் இந்திய விசா விண்ணப்பிப்போர்க்காக
இந்திய இராணுவத்துடனான எனது அனுபவங்கள் மிகவும் கசப்பானவையாக இருந்தன. இதனாலேயே நான் இந்திய அரசாங்கத்தை மிகவும் எதிர்ப்பவனாக இருக்கிறேன்.
அதற்காக இந்தியாவே போகமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கவில்லை.
எனது திருமணம் நிச்சயிற்கப்பட்ட போது, இந்தியாவிற்கு நாங்கள் செல்ல வேண்டும் அங்கு ஒரு reception வைக்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது. எனது மனைவியின் அப்பப்பா, அப்பம்மா மற்றும் சித்திமார்கள் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள்.
எனக்கும் மிகவும் குதூகலமாக இருந்தது. அட எனக்கும் தமிழ் நாடு போறதுக்கு ஒரு சந்தர்ப்பம் என்று. கனடா வந்து கிட்டத்தட்ட 15 வருடங்களாக நான் இந்த நாட்டை விட்டு வெளியில் போகவில்லை. அதுவும் “தமிழ்” நாட்டுக்குப் போகிறேன் என்ற எண்ணம் என்னை பூரிக்க வைத்தது. என் தமிழ் உருவான இடத்திற்கு, தாய்த் தமிழ் நாட்டிற்குப் போகப் போகிறேன் என்ற உணர்வு. சரி சரி மேல சொல்லுறன்.
தமிழ் நாட்டுக்குப் போகவேண்டும் என்றால் இந்திய விசா எடுக்க வேண்டுமே. என்ன கனடா சிட்டிசன் என்றாலும் இந்திய விசா எடுக்க வேண்டுமா? ஏன்? அது தான் இந்திய நாட்டின் பாலிசி. அதாவது, இந்தியனுக்கு வேற்று நாட்டில் என்ன சட்டதிட்டமோ, அதே தான் அந்த நாட்டுக்காரனுக்கு இந்தியாவில். இதை நான் மிகவும் வரவேற்கிறேன். இந்தியன் கனடா செல்ல விசா எடுக்க வேண்டும் என்பதால், கனடாக்காரன் இந்தியா செல்லவும் விசா எடுக்க வேண்டும் என்பது இந்திய ஆணை.
எனது தாயார் ஆறு மாதங்களுக்கு முன் தான் தமிழ் நாடு சென்று திரும்பியிருந்தார். ஆனால் அவரின் விசா கிட்டடியில் தான் காலாவதியாகி இருந்ததால், நானும் அம்மாமும் விசா விண்ணப்பத்தை தபாலில் அனுப்பினோம். இது தான் கனடாவில் இந்திய விசா எடுக்க வேண்டும் என்றால் செய்யவேண்டியது. உங்கள் கடவுச் சீட்டு, விண்ணப்பப் படிவம், இலங்கையில் பிறந்தவர் என்பதால் மேலுமொரு விண்ணப்பப் படிவம், கட்டணம் [ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக], Self addressed prepaid envelope [விசா குத்தி எங்கள் கடவுச் சீட்டை மீண்டும் எங்களுக்கே அனுப்புவதற்கு], எல்லாம் வைத்து அனுப்ப வேண்டும். அவர்கள் 4 வார காலத்திற்குள் விசா குடுத்து (அ) நிராகரித்து அனுப்பி வைப்பார்கள்.
சரி, நானும் அம்மாவும் அனுப்பி சில கிழமைகளில் எனக்கு விசா குத்தி வந்துவிட்டது. ஆனால், அம்மாவிற்கு வரவில்லை. சரி வரட்டும் என்று காத்திருந்து 6 கிழமைகளும் தாண்டிவிட்டது. எனக்கு திருமணமும் ஆகிவிட்டது, வருகிற சனிக்கிழமை பயணம் இன்னும் விசா வரவில்லை. தொலை பேசியில் அழைத்துப் பார்த்தோம். அவர்கள் எதையும் தொலைபேசியில் சொல்ல மாட்டோம், நேரடியாக வரச்சொன்னார்கள். திங்கட் கிழமை காலையிலேயே சென்றோம்.
அடங்க் கொய்யாலே, அங்கே ஒரு 150 பேருக்கு மேற்பட்ட சனம். அந்த விறாந்தையில் 150 மேல் அனுமதிகக் கூடாது என்று பலகை வேறு போடப்பட்டு இருந்தது. சரி என்று வரிசையில் இருந்து முன்னுக்கு கவுண்டரில் இருந்தவரிடம் எங்கள் பிரச்சினையைச் சொன்னோம். கேட்டார், 4 கிழமை ஆகிவிட்டதா என்று. நானும் சொன்னேன் 6 கிழமையே தாண்டிவிட்டது என்றேன். எங்கே பிறந்தவர் என்று கேட்டார். நானும் மலேசியாவில் என்றேன். என் அம்மா மலேசியாவில் தான் பிறந்தவர். இந்தியாவில் reception வைக்க இருக்கிறோம் என்று வேறு சொன்னோம். சரி என்று எனது அம்மாவின் பெயரை ஒரு சிறு துண்டு கடதாசியில் எழுதினார். இல்லைங்க, எனக்கு மாத்திரம் இல்ல, அங்க வந்த எல்லாருக்கும் இதே கதி தான்.
பெயர் கூப்பிடும் வரை கதிரையில் உட்கார்ந்திருந்தோம். கொஞ்ச நேரத்தில் கூப்பிட்டார். அட வேகமாக போகுதே என்று சந்தோசத்தில் நானும், வேறு கொஞ்சப் பேரும் அவர் பின் போனோம். உள்ளே ஒரு அறையில் வேறு ஒரு “ஆபீசரு” இருந்தாரு. அங்கே நாங்கள் மீண்டும் வரிசையில் உட்கார்ந்தோம். அதிலும் வேகமாக பார்த்து அனுப்பிக்கொண்டிருந்தார். நாங்களும் எங்கள் பிரச்சினையைச் சொன்னோம். நான் சொன்னேன், எனது தாயாருக்கு 65 வயதுக்கு மேல் தாண்டிவிட்டது, மற்றும் அவர் ஏற்கனவே இப்போ போன வருடம் தான் இந்தியா சென்று திரும்பியிருந்தார். அவருக்கு ஏன் இவ்வளவு தாமதிக்குது என்று தெரியவில்லை. இவரிடமும் சொன்னேன், எனது தாயார் மலேசியாவில் பிறந்தவர் என்று. இந்தியாவில் reception வைக்க இருக்கிறோம் என்று வேறு சொன்னோம். அவரும் ஒரு சிறு துண்டில் பெயரை எழுதி விட்டு வெளியில் காத்திருக்கச் சொன்னார்.
அம்மா தீவிரவாதி என்று நினைக்க அவருக்கு வயதும் இல்லை, இலங்கையில் பிறக்கவும் இல்லை. என்னை நினைத்திருந்தாலாவது நம்பும்படியாக இருந்திருக்கும். ஒரே envelope இல் எனதையும், அம்மாவையும் அனுப்பிய படியால், ஏன் ஒருவருக்கு விசா கொடுத்து மற்றவருக்கு தர மறுக்கிறார்கள் என்று எனக்குள் குழப்பம்.
வெளியில் மீண்டும் வந்து காத்திருப்பு. அதில் அருகிலிருந்தவர்களுடன் உரையாடினேன். அவர்கள் கதையும் சோகக் கதையாகவே இருந்தது. நாங்கள் இலங்கைக் காரங்கள் என்பதால் அல்ல, இந்தியர்களுக்குக் கூட இதே நிலமை தான் என்பதில் எனக்குள் ஏதோ ஒரு சந்தோசம். அப்படியோ, “நான் தனியாள் இல்ல”.
இந்தியா, பாகிஸ்தான் பிரிவதற்கு முன் பிறந்த ஒருவர் இந்திய சிட்டிசன் எடுப்பதற்காக கடந்த 5 மாதங்களாக அலைகிறாராம். ஒவ்வொரு முறையும் ஏதாவு இல்லை அதைக் கொண்டுவா இதைக் கொண்டுவா என்று திருப்பி விடுவார்களாம். தான் கேட்டனானாம், மொத்தமாகச் சொன்னால், தான் ஒரேயடியாகவே கொண்டுவந்து விடுவேனே என்று. அதற்கு அதிகாரி சொன்னாராம், இல்லை ஒவ்வொருமுறையும் தான் சொல்லுவோம் என்று. அவர் வேறும் ஒன்று சொன்னாராம்: “So you thought it was easy to get out of India” ஹிந்தியில் சொன்னாராம். அதன் அர்த்தம் என்னவென்றால், இந்தியாவை விட்டு வெளியேறுவதே கடினம் [exit visa என்று எல்லாம் எடுக்க வேண்டும்]. ஆனால், அதை விட மீண்டும் இந்தியாவிற்கு வருவது மிகவும் கடினம். ஓ சொல்லவே மறந்திட்டனே, அவர் ஒரு தமிழ் நாட்டுக்காரர். ஆனால், டெல்லியில் தான் வளர்ந்தது. அவரால் எனது தமிழை [இலங்கைத் தமிழை] விளங்க முடியவில்லை.
சரி இப்படியே நேரம் போய்ச்சு. வேறு ஒரு இலங்கைத் தமிழர். அவர் வணிக விசா [business visa] அவர் வேலை பார்க்கும் நிருவனத்தினூடாக எடுக்க அனுப்பியிருந்தாராம். அவருக்கும் ஒன்றும் வரவில்லை. நாங்கள் காத்திருந்து காத்திருந்து, 1:30 pm ஆகிவிட்டது. கொஞ்சப் பேர் தான் இருந்தார்கள். மதிய உணவு உண்ணும் நேரம் எல்லோரும் வெளியேறுங்கள் என்றார்கள். அட நீங்கள் உள்ளே சாப்பிடுவதற்கு நாங்கள் ஏன் வெளியேற வேண்டும்? நாங்கள் கழவெல்லாம் எடுக்க மாட்டோம் என்று பேசினேன். அட அது பொய்யுங்க. நான் பேசலை, அங்க வந்த வேற ஹிந்திக் காரங்கள் பேசி, ஹிந்தியில கூட சண்டை எல்லாம் போட்டார்கள். நாங்கள், அமைதியாக நல்ல பிள்ளை போல் இருந்தோம். நீஙக வேற, ஏதாவது சொல்லப் போக, விசாவை நிராகரிச்சிட்டாண்ணா?
சரி வெளியில் விட்டு கதைப் பூட்டி 2:00pm திறப்பம் எண்டார்கள். வேறு ஒருவர் 2:30 pm என்றும் என்னொருவர் 3:00 pm என்றும் சொன்னார்கள். வெளியில் பலகையில் 3:00 pm தான் திறக்கப் படும் என்று board இருந்தது. எனக்கு ஏதோ அப்ப தான் திறப்பாங்க எண்டு மனம் சொல்லிச்சு. சரி கொஞ்ச நேரம் தானே எண்டு காத்திருந்தா, பெயர் கூப்பிடுறாங்க. எங்க பெயர் இல்லை. வேறு பெயர்கள். ஆனா, ஆட்கள் எல்லாம் வெளியில. இது என்னடா கொடுமை என்றாகியது. ஆட்களை வெளியேறச் சொல்லிவிட்டு உள்ளுக்குள் பெயர் கூப்பிடுறாங்க.
நாங்கள் போய் மதிய உணவு சாப்பிட்டிட்டு வந்தோம். இப்போ சனம் கூடீட்டுது. பிறகும் உள்ளுக்குள்ள திரும்ப வரிசையில் நின்று திரும்ப பெயர் கொடுத்து, திரும்ப அவர் எழுதினார் ஒரு சிறு துண்டில். எனக்கு என்னமோ முன்னுக்கு இருப்பவருக்கு எங்கள் விசயம் பற்றித் தெரியும், இருந்தும் ஒன்றும் சொல்கிறார் இல்லை என்று தோன்றிற்று.
இலஞ்சம் வாங்கத் தான் இவ்வளவு இழுத்தடிப்போ என்று வேறு எண்ணினேன். ஆனால், இலஞ்சம் குடுக்குமளவிற்கு மறைவாக அமையவில்லை. சிலரை உள்ளுக்குள் வேலை செய்யும் நபர் வந்து specific ஆக கூப்பிட்டு எதோ கதைத்து அலுவல் பார்த்து விடுகிறார்கள். அவர்கள் அனேகமாக “சிங்” ஆக்களாக இருந்தார்கள்.
இப்படி இருந்து இருந்து ஒண்டும் நடக்கேல்லை. அடிக்கடி அவரிட்டை போய் ஞாபகப் படுத்திக்கொண்டு இருந்தோம். அந்த வணிக விசா கேட்டு வந்திருந்தவை ஒரு கிழமையால் வரும்படி சொல்ல, அவருக்கு கோவம் வந்து, இது வணிக விசா, இந்தியாவிற்கு வணிகம் செய்ய நான் வேலை பார்க்கும் நிறுவனம் அனுப்புது, நீஙகள் விசா தராவிட்டால், நிறுவனம் அனுப்பாமல் விட்டுவிடும் என்றார். அதற்கு அவர் மிகவும் லாவகமாக “if you don’t go, its OK” என்றார். இப்படிச் செய்தால் இந்தியாவிற்குத் தானே நட்டம் என்று மனதிற்குள் சிந்தித்துக்கொண்டேன். எங்கள் ஆக்கினை தாங்க முடியாமலோ என்னவோ, எங்களை புதன் கிழமை வரச்சொன்னார். நான் கேட்டேன், சனிக்கிழமை பிரயாணம், கட்டாயம் தருவீர்களா என்றேன்? அவரும் கட்டாயம் என வாக்குறுதி கொடுத்தார்.
மீண்டும் புதன் கிழமை போய் மீண்டும் வரிசையில் நிண்டு அண்டைக்கு வந்ததை ஞாபகப் படுத்தி, பெயர் எழுதி கூப்பிடுறன் என்றார். மீண்டும் காத்திருந்து, அடிக்கடி ஞாபகப் படுத்தினேன். அப்போது மேலதிகாரி ஒருவரும் வந்து பிரச்சினைகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் முறையிட்டேன். தாய் 65 வயதைத் தாண்டிவிட்டா, மலேசியாவில் பிறந்தவ, சில மாதங்களுக்கு முன் தான் இந்தியா சென்று திரும்பினவ, reception வேறு வைத்திருக்கிறோம் என்று. இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கேக்கிள்ளையே, அந்த முதலாம் நபர், தான் எங்களைக் கவனிப்பதாகவும் அதை எடுத்துக்கொண்டுவந்து தான் கொடுப்பதாகவும் சொன்னார்.
சரி எண்டு பார்த்தால், சில நிமிடங்களில் அவர் கடவுச்சீட்டுடன் வந்தார். எங்களுக்கு மிகவும் ஆனந்தம். எடுத்து முதலில் பார்த்தது, விசா குத்தியிருக்கா இல்லையா எண்டு. என்ன தெரிஞ்சது?
அட நாங்கள் விசாவிற்கு விண்ணப்பித்து அனுப்பி 2ம் நாள் விசா குத்தப்பட்டு இருக்கு. அடங்கொயாலே, 7 கிழமையாக அதை வைத்திருந்து, எங்களையும் இப்படி இரண்டு நாட்கள் இழுத்தடித்து… ஏன் .. ஏன்? வெளியில் நிண்ட ஒரு இந்தியரிடம் சொன்னேன் என் கதையை, அவர் இப்பவாச்சும் தந்தாங்களே எண்டு சந்தோசப்படச்சொன்னார்.
ஆகவே, இந்தியா போக விசா விண்ணப்பிக்கும் கனடாக் காரருக்கு:
ஒரே envelope இல் எல்லாருடைய விசா விண்ணப்பத்தை அனுப்பாதீர்கள். வேறு சிலருக்கும் இப்படி ஒன்றாக அனுப்பினால், எல்லோருக்கும் கொடுத்து அதில் ஒருவரைப் பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறார்களாம்.
அதனால், தனித் தனியாக ஏலுமெண்டால் ஒன்றை அனுப்பி ஒரு கிழமைக்குப் பின் அடுத்ததை அனுப்புங்கள்.
அப்பாடியோவ், ஒரு மாதிரி இந்திய விசா எடுத்தாச்சு. பயணிப்போமா தமிழ் நாட்டிற்கு …
One Comment
Pingback: