வடிவேல் அரசியலும், தமிழீழமும்
- தமிழர்களுக்குத் தமிழீழம் வேண்டும். இதை எதிர்ப்பவர் எல்லோரும் எதிரிகளாகத் தான் பார்க்கப் படுவார்கள்.
- சிங்களவர்கள் இலங்கையைப் பிரிக்க எத்தணிக்கும் எவரும் எதிரிகளாகப் பார்க்கிறார்கள்.
- ஆனால் வரலாற்றில் இரண்டும் வேறு வேறு நாடுகளாகத் தான் இருந்தன என்பதை சிங்கள அரசு கணக்கிலெடுக்குதில்லை.
இதனால் தான் இந்திய இராணுவம் இலங்கை வந்த போது, தமிழர்களும் எதிர்த்தார்கள், சிங்களவர்களும் எதிர்த்தார்கள். இறுதியில் எதிரியின் எதிரி நண்பன் என்ற சூட்சுமத்தைக் கையாண்டுவிட்டார்கள்.
என்னமோ ஏதோ, இந்தியா பொய்க் காரணங்களைச் சொல்லி தமிழீழம் அமைவதைத் தடுப்பதில் மூச்சாக இருக்கிறது. வங்காள தேசம் அமைக்கும்போது இந்தியாவிலும் பிரிவினை வரும் என்று எண்ணாத இந்தியா இப்போது மட்டும் ஏதோ கவலைப்படுவது போல் காட்டிக்கொள்கிறது. உண்மையில் அப்போது தான் இந்தியா பிரிவதற்கான பல காரணிகள் இருந்தன. புதிதாக உருவாகிய இந்தியா, நாட்டு அரசியல் எப்படி இருக்கும் என்று தெரியாத பல தேசங்கள். இந்து முசுலிம் கலவரம் நடந்து முடிந்த காலம்.
இலங்கை அரசின் வாக்குறுதிகளுக்கு மனம் ஆறுதலடைய தமிழ் நாட்டு அரசியல்வாதிகளைச் சொல்கிறது. 20 வருடங்களுக்கு மேலாக தமிழக மீனவர்களைக் கொல்லமாட்டோம் என்று தான் இலங்கை அரசு வாக்குறுதி கொடுத்துக்கொண்டு வருகிறது. அதை அப்படியே நம்பும்படி தமிழ் நாட்டு அரசியல்வாதிகளிடம் சொல்லுகிறது. அவர்களும் வடிவேல் பாணியில் [அதாங்க, எவ்வளவு தான் அடிச்சாலும் என்ன தான் பண்ணினாலும் கடையிசில் தான் பெரிய ஆள், வெற்றி பெற்ற மாதிரி படங்காட்டுறது] அரசியல் பண்ணுகிறார்கள்.
தமிழீழம் அன்றி வேறேதும் தீர்வாகாது ஈழத் தம்ழருக்கு. இதை ஒத்துக்க மறுத்து கடும்போக்காக வரும்போது தமிழ் நாட்டு மக்கள் கொதித்தெழுகிறார்கள். அவர்கள் தமிழீழத்திற்கு ஆதரவு தரும்போது இந்தியா மறுக்க, இந்தியாவிலிருந்து வேறுபட்டு “தமிழன்” என்று தனித்து கோரிக்கை எழுப்ப, இந்தியா “பாத்தீங்களா, தமிழீழம் கிடைச்சால் பிறகு இந்தியாவிலும் பிரிவினை தான் என்று நான் சொன்னேன் தானே” என்று குண்டைத் தூக்கிப் போட்டு தமிழீழ மக்கள் வாயில் மண்ணைப் போடுகிறது. கடைசியில் இந்தியாவின் எண்ணம் ஈடேறுகிறது.
தமிழீழ மக்கள் கேட்பதெல்லாம் ஒன்று: “உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, உவத்திரமாவது செய்யாதிருங்கள்”.
தமிழீழம் பெற்றுத்தராவிட்டாலும் பரவாயில்லை. [தமிழீழம் ஈழத்தமிழனால் மட்டுமே வென்றெடுக்க முடியும் என்பது தலைவரின் நம்பிக்கை]. எதிரிக்கு உதவாமலிருங்கள் அதுவே போதும். கோடிக்கணக்கில் வாரி வாரி இனாமாக கொடுக்கிறது இந்திய அரசு எதிரிக்கு. இராணுவ உதவி கொடுக்கவில்லை என்று உத்தியோகபூர்வ அறிக்கைகள் விட்டு பின்பக்கத்தில் இராணுவ வீரர்களையே கொடுக்கிறது. அப்போ தமிழ் நாட்டு அரசைக் கூட இந்தியா கணக்கிலெடுக்கவில்லை என்று தானே அர்த்தம்?
இப்போ மீண்டும் இந்தியாவிலிருந்து வேறுபட்டு “தமிழன்” என்ற ரீதியில் தமிழ் நாட்டுத் தமிழர்கள் குரல் கொடுக்க, இந்தியா “பிரிவினை” என்று சொல்லி மீண்டும் தமிழீழ மக்கள் வாயில் மண்ணைப் போட்டு தன் பாதையில் லாவகமாக நடந்து போகிறது. மீண்டும் வடிவேல் அரசியல் தான்.
அண்ணே வடிவேல் அண்ணே, நீங்களாச்சும் அரசியலுக்கு வந்து “தனித் தமிழீழம் தான் தீர்வு என்று சொல்லுங்கண்ண.
“திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டல், திருட்டை ஒழிக்க இயலாது” என்ற பாடல் தான் ஞாபகத்திற்கு வருகுது.