மாவீரர்கள் தெய்வங்கள் என்று சொல்வது சரியா?
மாவீரர்களை நினைவுகூற வேண்டும் என்று மாவீரர் வாரமாக நவம்பர் 21 முதல் 27 வரை கடைப்பிடிக்கப் படும் என்று தலவர் இந்திய இராணுவ ஆக்கிரமிப்பின் நேரத்தில் வெளியிட்டார். அப்போது நானும் தமிழீழத்தில் இருந்தேன். அது பற்றிய எனது பதிவை இங்கே படிக்கலாம்.
நேன்று நான் இருந்த தொடர் மாடிக் கட்டிட வளாகத்தில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப் பட்டது. ஒரு 75 பேர் அளவில் வந்திருந்தார்கள். 6:30 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 7 மணிக்கு கதவு பூட்டப்பட்டது. அதன் பின் வந்தவர்கள் எவரும் உள் அனுமதிக்கப்படவில்லை, மாவீரர் கல்லறைக்கு தீபங்கள் எல்லோரும் ஏற்றி முடியும் வரை.
வழமை போல் எல்லாம் நடைபெற்றது. நான் இங்கு பதிவு போடக் காரணம் அது அல்ல. இந்த நிகழ்வை நடத்தியவர், மாவீரர்கள் தெய்வங்களாக வழிபட வேண்டியவர்கள் என்று அடிக்கடி உறுதி கொண்டார்.
இப்படி தலைவர் எதையும் சொன்னது இல்லை. மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று சொன்னது மட்டுமே. இன்னும் சொல்லப் போனால், சமயம் சம்பந்தமாக எதுவுமே இயக்க நடைமுறைக்குள் வரக்கூடாது என்பதில் முடிவாக இருப்பவர். தீபம் ஏற்றுதல் என்பது கூட தமிழ் முறை என்பதாக பயன்படுத்தப்படுகிறதே ஒளிய சமய சம்பந்தமாக அல்ல. தலைவர் இந்துவாக இருந்தால் கூட இறந்தவர்களை எரிக்காமல், விதைத்து கல்லறை கட்டினார். தன் மகனுக்கு தனது நெருங்கிய நண்பனான சாள்ஸ் அண்டனி என்று பெயர் வைத்தார். தலைவரின் மூல சிந்தனை, எந்த சமய எந்த வழித்தோன்றல் என்ற பாகுபாடின்றி “தமிழன்” என்ற ஒரு குடையின் கீழ் எல்லோரையும் இணைக்கவே போராடி வருகிறார். ஆரியரா திராவிடரா என்ற கேள்வியே இல்லாமல், பூசகராக இருந்தால் கூட தமிழன் என்று தான் பார்க்கப்படுகிறது. நீ எந்த சமய, எந்த வழித்தோன்றலாக இருப்பது என்பது முக்கியம் அல்ல, நீ தமிழனாக இரு. முசுலிம்கள் தாங்கள் “தமிழர்” அல்ல “முசுலிம்” என்ற வேறுபட்ட இனம் என்று இலங்கையில் பிரிந்து நின்றபடியால் [இந்தியாவில் அப்படி அல்ல] தான் பல விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தேறின. சரி அந்த சிக்கலான விடயத்தைப் பற்றியது அல்ல எனது பதிவு.
நேற்று நடந்த மாவீரர் நாள் நிகழ்வில், மாவீரர்கள் காவல் தெய்வங்களாக வழிபட வேண்டியவர்கள் என்று சொல்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நான் இறைவனைத் தவிர உருவ (அ) பட வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவனாக இருந்து, நான் மாவீரர்களை வழிபட மாட்டேன் என்று சொன்னால், என்னை தமிழீழத்திற்கு எதிரானவன் என்ற பட்டியலிலா போடுவீர்கள்? அல்லது நான் ஒரு உருவ (அ) பட வழிபாட்டிற்கு எதிரான ஒரு சமயத்தில் இருந்தால், இப்படி மாவிரர்களை வழிபட மாட்டேன் என்று சொன்னால்? ஞாபகமிருக்கட்டும், நமது தமிழீழ போராட்டத்தை ஒரு இந்து/ சைவ மக்களின் போராட்டம் மட்டுமே என்று மாற்றாதீர்கள். இது சமயங்களுக்கு அப்பாற்பட்டு ஒன்றுபட்ட “தமிழனின்” போராட்டம்.
நான் மாவீரர்களை மதிக்கிறேன். அவர்களின் தியாகம் அளப்பரியது. அவர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் வேட்கை நிறைவேற நான் வழிபடும் கடவுளிடம் பிராத்திக்கிறேன். ஆனால், நான் எனது இறைவனைத் தவிர வேறு எவரையும் (அ) எதையும் தெய்வங்களாக வழிபட மாட்டேன்.
குறிப்பு:
நான் ஒரு பல தெய்வங்களை வணங்கும் இந்து. எனக்காக இதை எழுதவில்லை. இப்படி ஆதங்கப்படுபவர்களை நாங்கள் ஒதுக்கிவிடக் கூடாது என்ற ஆதங்கத்தில் எழுதுகிறேன்.