புலி ஆதரவு ஏன்?
ஒரு பலமுள்ள தலைமை உள்ளவரை தான் எல்லோரும் மதிப்பார்கள். இல்லாவிடில் பாலஸ்தீனம் போல் தான் இருக்கும். சுற்றியுள்ள அத்தனை முஸ்லிம் நாடுகளும் பாலஸ்தீனத்தை ஆதரித்தும் ஒரு தீர்வு இல்லாமல் இருக்க காரணம் என்ன?
ஒரு தலைமை என்று இல்லாமை. ஒரு இயக்கம் சமாதானம் என்றால் மற்றய இயக்கம் போர் என்கும்.
இதைத் தான் எதிரிகள் எதிர்பார்க்கிறார்கள். சனநாயகம், பேச்சுச் சுதந்திரம் என்ற போர்வையில் இது தான் உண்மையில் எதிரிக்கு வேண்டும். மற்றய நாட்டுக் கிளர்ச்சிக்காரர்கள் தோற்கவும் கூடாது வெல்லவும் கூடாது. இது தான் அவர்ளின் சூட்சுமம்.
இதே பாணியில் தான் இந்தியாவும் போகிறது.
பிழைத்துப் போன விடயம் என்ன என்றால், புலிகள் இந்தியாவிற்கே தலையிடியாய்ப் போனது.
1983 இற்குப் பின் தான் இலங்கை இனப்பிரச்சினை வெளிநாடுகளுக்குத் தெரியவந்தது. இந்தியா உலகம் முழுக்க போய் ஈழத்தமிழனுக்காக கதைத்து அல்ல. ஒரு பிரித்தானிய வெள்ளைக்காரன் தனது காரினுள் இருந்து கொழும்பில் நடந்த இனக்கலவரத்தை video recording பண்ணியதால்.
இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே பிரச்சினை துவங்கிவிட்டது.
- சிங்களம் மட்டும் தான் அரச மொழி என்று கொண்டுவரப்பட்டது.
- பௌத்தம் மட்டும் தான் அரச மதம் என்று கொண்டுவரப்பட்டது.
- ஏற்கனவே அரச உத்தியோகத்தில் இருந்தவர்களுக்கு 6 மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டது சிங்களம் படித்து சோதனையில் சித்தி பெற. அப்படி சிங்களத்தில் சித்தி பெறாதவர்கள், வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள்.
- தமிழர்கள் தனியார் நிறுவனங்கள் ஆரம்பித்தார்கள். இதில் முன்னேறுவதைக் கண்டு பொறுக்க முடியாமல் இனகலவரங்கள் நடத்தி தமிழர் சொத்துக்காளைச் சேதப்படுத்தினார்கள். இது 1950 களிலும் 1970 களிலும் 1980 களிலும் நடந்தது.
- தமிழர் பிரதேசத்தில் படிப்பவர்கள் சிங்கள பிரதேசத்தில் படிப்பவர்களையும் காட்டிலும் அதிக மதிப்பெண் வாங்கினால் தான் பல்கலைக்கழக அனுமதி என்று சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் இப்போதும் அமுலில் உள்ளது. இது தான் அமைதிப்போராட்டமாக இருந்த பிரச்சினை ஆயுதப்போராட்டமாக மாற முக்கிய காரணம்.
நாங்கள் தாக்கப்படும்போது, ஒடுக்கப்படும்போது எந்த நாடும் வந்து உதவவில்லை. இலங்கை அரசு மீது எந்த நாடும் அழுத்தம் கொடுக்கவில்லை. மாறாக open visa கொடுத்தார்கள். படித்தவர்கள்/ செல்வந்தர்கள் புலம்பெயர்ந்தார்கள்.
எப்படி அப்போ இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்காமல் இருந்தார்களோ அப்படி இப்பவும் இருக்க வேண்டும். ஆனால், இல்லை.
தமிழனுக்கு உதவ என்று சிலர் வந்தார்கள், ஆனால் உண்மையில் “உதவ” வரவில்லை என்பது தான் வரலாறு.
ஈழத் தமிழ் அரசியல்வாதிகளால் எதையும் சாதிக்க முடியவில்லை. காரணம், சனநாயகம். பெரும்பான்மை மக்களின் விருப்புத் தானே சனநாயகம். இலங்கையில் சிங்களவர்கள் தானே பெரும்பான்மை.
பிரித்தானியக் காரன் தந்த சிறுபான்மை இனத்திற்கான பாதுகாப்புச் சட்டத்தையே பெரும்பான்மை சிங்கள அரசியல்வாதிகள் மாற்றி எழுதிவிட்டார்கள்.
எதிர்க்கட்சியாகவாவது இருந்த தமிழ் கட்சியை இனிமேல் அப்படிக் கூட வராமல் செய்துவிட்டார் ஜே.ஆர். ஜெயவர்த்தனா. விகிதாசாரப்படியே பதவிகளிலும் இடம் என்றாகியது.
இதனால் தமிழ் அரசியல்வாதிகளில் நம்பிக்கை போய், சனநாயத்தில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை போய், எந்த சிங்கள அரசு வந்தாலும் பெரும்பான்மை என்ற ஒன்றால் அரசியல்வாதிகளால் எதையும் கொடுக்க இயலாது என்ற நம்பிக்கை போய் நம் உரிமையை நாமே தேடிக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தில் எமது போராட்டம் புதுவடிவம் பெற்றது.
“உதவ” வந்தவர் உவத்திரமாய் போன பின் தான் மக்கள் புலிகளை ஆதரிக்கத் தொடங்கினார்கள்.
இனி புலிகளை விட்டால் வேறு ஒருவரை நம்பத் தயாராகவும் இல்லை. இந்தியா இப்போது ஒரு உத்தியைக் கையாழ்கிறது. தமிழரை ஆதரிக்கிறோம் ஆனால் புலிகளை இல்லை. இது தான் நான் முதல் சொன்ன சனநாயகப் போர்வையில் பிரிக்க முற்படும் முயற்சி. இந்த சுழ்ச்சியை நாங்கள் அறிவோம்.
புலிகள் தான் எங்கள் அரசு. எது வேண்டுமானாலும் எங்கள் அரசுடன் பேசியே முடிவெடுக்கப்பட வேண்டும். புலிகளை விட்டுத் தமிழரைப் பிரிக்க இந்தியா மீண்டுமொருமுறை முயற்சிக்கிறது. இப்படிப் பல சூழ்ச்சிகள் தோற்றுப் போனாலும் கஜினி முகமது போல் இந்தியாவும் விடுவதாய் இல்லை. றோ இற்கும் எமக்கும் ஒரு பெரிய காதல் வரலாறே இருக்கிறது.
சிலர் சொல்வார்கள், புலிகளால் தான் தமிழீழம் கிடைக்காமல் இருக்கிறது. இல்லாவிடில் இந்தியா தமிழீழம் வாங்கித் தந்திருக்கும் என்று.
ஐயா எங்கோ நடக்கும் பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இந்தியாவால் ஆதரவு வளங்க இயலும், வங்க தேசத்தை இந்தியாவால் உருவாக்க இயலும் ஆனால், தமிழனுக்கு மட்டும் ஒன்றும் செய்ய முடியவில்லை அந்தக் காலத்தில். இது புலிகள் என்ற பெரும் படை இல்லாத காலத்தில்.
ஆகவே புலிகளை விடுங்கள் நாங்கள் தமிழீழம் வாங்கித் தருகிறோம் என்பதெல்லாம் சும்மா ஒரு சூழ்ச்சி. உண்மையில் தமிழனின் மேல் அக்கறை இருந்திருந்தால், வங்க தேசம் உருவாகும்போதே உதவியிருக்கலாம்.
புலிகளைப் பெரிய ஆளாக்கியதே இந்தியா தான். அதாவது, இந்தியா தமிழீழத்தில் செய்த அட்டூளியங்களால் மக்கள் புலிகள் பக்கம் திரும்பினார்கள்.
இந்தியாவால் பாகிஸ்தானைப் பிரித்து வங்க தேசம் உருவாக்க முடியுமானால், சீனாவால் இலங்கையைப் பிரித்து தமிழீழம் உருவாக்க முடியும்.
யார் குத்தியானாலும் அரிசி ஆகினால் போதும் என்று சிந்திக்கவில்லை எமது தலைவர். தமிழகத்தைப் பகைத்து தமிழீழம் உருவாகக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். இந்தியாவுடனான போரில், பாகிஸ்தானிடத்திலோ (அ) சீனாவிடத்திலோ உதவி கேட்டிருந்தால் இல்லை இந்தியாவிற்கு எதிராக உதவ மாட்டோம் என்று கையை விரித்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? எவ்வளவு பேரிழப்புகள் வந்தாலும், புலிகள் தமிழ் மக்களையன்றி வேறொருவரின் உதவியில் நிமிர்ந்து நிற்கவில்லை. இது தான் புலிகளின் முழுப் பலம். இதை உடைக்கவெ இந்தியா பல சூழ்ச்சிகளைக் கையாள்கிறது. அந்த வரிசையில் இப்போதய சூழ்ச்சியே தமிழர்களை ஆதரிக்கிறோம் புலிகளை அல்ல என்பது.
தமிழனைப் பிரித்து ஒரு பலமற்ற குழுவாக ஆக்குவதில் இந்தியா மும்முரமாகத் தான் இருக்கிறது. இந்தக் கபட நாடகத்தை உணர்ந்து தமிழர்கள் ஒன்றுபடுவார்களாக.