சீன ஜீன்ஸ்
நேற்று WNED தொலைக்காட்சி அலைவரிசையில் ஒரு documentary காட்டினார்கள். அதன் தலைப்பு “China blue”. Independent Lens என்பவர்கள் இதை எடுத்திருந்தார்கள். lifeng என்னும் ஜீன்ஸ் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்யும் பெண் தொழிலாளியைச் சுற்றி எடுக்கப்பட்டது.
அந்தப் பெண் கிராமத்தில் இருந்து வேலைக்கு வருகிறா. 17 வயது நிரம்பிய அவ காலை 8 மணியிலிருந்து இரவு 7 மணிவரை வேலைசெய்ய வேண்டும். ஆனால், அனேகமாக “overtime” செய்யவேண்டும் என்று பலகையில் எழுதிவிடுவார்கள். அப்போது தொடர்ந்து இரவிரவாக வேலை செய்ய வேண்டும். இரண்டு மூன்று நாட்கள் காட்டுகிறார்கள். 13 மணித்தியாலம், 15 மணித்தியாலம், 17 மணித்தியாம் என்றெல்லாம் வேலை செய்கிறா. அவ மட்டுமல்ல அந்த தொழிற்சாலையே வேலைசெய்கிறது. overtime வேலையை நிராகரிக்க எல்லோருக்கும் பயம். நிராகரித்தால் வேலை போய்விடும். இதில் என்ன கொடுமை என்றால், எவருக்கும் overtime என்பதற்காக அதிகமாக சம்பளம் கொடுக்கப்படுவதில்லை. நித்திரை வந்தாலும், சுகமில்லை என்றாலும், கஷ்டப்பட்டு வேலை செய்கிறார்கள். செய்யவேண்டிய கட்டாயம்.
கனடா தொழிற்சாலைகள் போல் punch card system. அதாவது ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஒரு அடையாள அட்டை போல் கணினி காந்த பட்டியுடன் கூடிய ஒரு அட்டை இருக்கும். அதை தொழிற்சாலையில் உள்ள scanner [வாசிக்கும் இயந்திரம்] இல் காட்டினால், நேரம் பதியப்படும். அப்போ, இந்த தொழிலாளி எத்தனை மணிக்கு வேலைக்கு வருகிறார் என்பது தெரிந்துவிடும். இதில் ஒவ்வொரு நிமிடம் பிந்தினாலும் தண்டனைப் பணம் [fine] என்று சம்பளத்தில் கழிக்கிறார்கள். கனடாவில் 15 நிமிடங்கள் பிந்தினால் 1/2 மணித்தியாள சம்பளம் குறைப்பு. முதலாளி தனது அலுவலகத்தில் இருந்தவாறே முழு தொழிற்சாலையையும் தனது கணினியூடாகப் பார்க்கிறார்.
முதலாளி முன்னால் காவல்துறை அதிகாரி. அவர் சொல்கிறார், தான் 15 வயதில் வேலை செய்யத் தொடங்கினேன் என்று.
இந்தப் பெண்ணுடன் தொழிற்சாலையில் தங்கும் இன்னுமொரு பெண்ணுக்கு 14 வயது. ஆனால், கூடிய வயதாக அடையாள அட்டை வைத்துக்கொண்டு வேலை பார்க்கிறார்.
தொழிற்சாலையிலேயே தங்கி எல்லோரும் வேலை பார்க்கிறார்கள். “காதல்” படத்தில் வருவது போல் பலர் ஒரு சிறு இடத்தில் தான் வாழ்கிறார்கள்.
அவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் குறைவு. ஆனால், அவர்கள் கூடிய சம்பளம் எடுக்கிறோம் என்று ஒரு பத்திரத்தில் கையெழுத்திடுகிறார்கள். சரியாக ஞாபகம் இல்லை. அவர்கள் எடுக்கும் சம்பளம் $0.37 சதம். ஆமாம் அமெரிக்க நாணயத்தில் அது தான். ஆனால் கையெழுத்திடுவது $0.97 சதம் என்று.
வேறு ஒருவர் பேட்டி எடுக்கொம்போது ஒரு supervisor சொல்கிறார், தங்களிடம் தொழிலாளிகளுக்கு என்ன சொல்லிக்கொடுக்கப்படவேண்டும் என்று முதலாளிகள் தருவார்களாம். அப்படிச் சொல்லவேண்டும் என்று தாங்கள் தொழிலாளிகளுக்கு சொல்வோமாம். அப்போ அரச உத்தியோகத்தர்கள், வெளிநாட்டு சோதனையாளர்கள் வந்து சோதனை போடும்போது தொழிலாளிகள் நன்றாக பதில் சொல்வார்களாம். இல்லாவிட்டால் வேலை போய்விடுமே.
ஒரு முறை ஏற்றுமதியின் பின் ஒரு party வைக்கிறார்கள். அதில் முதலாளி பேசும்போது சக comrads என்று சொல்லியும் பேசத் தொடங்குகிறார்.
தொழிற்சாலையில் தங்கி வேலை செய்வதால், எவருக்கும் நீண்ட விடுமுறை இல்லை. பெருநாட்களில் சில தொழிற்சாலைகள் நீண்ட விடுமுறை விடுவார்கள். இந்தப் பெண் ஒரு கடிதம் ஒன்றை ஒரு ஜீன்ஸ் இற்குள் வைக்கிறார். யாருக்குப் போய்ச் சேருகிறதோ தெரியவில்லை.
அப்படியே ஒரு சீக்கியர் இந்த தொழிற்சாலை முதலாளியுடன் பேரம் பேசுவதைக் காட்டுகிறார்கள். எனக்கு அதிசயமாக இருந்தது. அட இந்தியாவைவிட சீனாவில் மலிவாக எடுக்கலாமோ என்று. ஆனால், அவர் இந்தியாவிற்காகத் தான் வந்தாரா அல்லது வேறு நாட்டுக்காகவா என்று சரியாகத் தெரியவில்லை. ஒரு ஜீன்ஸ் $4.30 ஆரம்பித்து கடைசியில் $4.00 முடிக்கிறார். மேற்கு நாடுகளில் வசிப்பவர்களுக்கு அதிசயமாக இருக்கிறதா? அட உண்மையாவே இவ்வளவு தானுங்க ஒரு ஜீன்ஸ் இன் விலை. இதில் இன்னும் அதிசயம் என்னவென்றால், அந்த முதலாளி சொல்வார், தனக்கு ஒரு ஜீன்ஸ் செய்ய மொத்தமாக செலவாவது $1.00 மட்டுமே.
அடக் கடவுளே இந்த Levi ஜீன்ஸ் ஐ இங்கே வட அமெரிக்காவில் $50 குறைவாக வாங்க இயலாதே! இப்ப விளங்குதா ஏன் எல்லோரும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள் என்று.