இடுகைகளில் தமிழில் தலைப்பு வைக்கும்போது கவனிக்கப்பட வேண்டியவை
வலைப்பதிவில் இடுகைகள் இடும்போது, தமிழில் தலைப்பை வைப்பதினால் சில தொழில்நுட்ப சிக்கல்களுக்குள் தள்ளப்படுகிறார்கள், நமது தமிழ் வலைப்பதிவாளர்கள். அவற்றை சரி செய்ய வழியை இங்கே தருகிறேன்.
ஒருங்குறித் தமிழ் கணினியில் வேலை செய்தாலும், எல்லா இடங்களிலும் ஒருங்குறித் தமிழ் வேலை செய்யாது. இதற்குக் காரணம் தமிழ் இரண்டாம் தர மொழியாக ஒருங்குறியில் ஏற்றப்பட்டதே. [மேலும் அறிய தமிழ் ஒருங்குறி?!]
உங்கள் இடுகைகளை தமிழ் தலைப்பில் சேமிக்கும்போது வலைப்பதிவு மென்பொருள் அந்த தலைப்பை இணைய முகவரியாக எடுத்துக்கொள்கிறது. ஆனால், “போ” என்பது இணைய முகவரி இடும் இடத்தில் அப்படி சரியாகத் தெரியாது. அது இணைய முகவரிகளை சேமிக்கும் முறையில் மாற்றியே தெரியும். அது மட்டுமல்லாமல் “போ” என்பது தமிழ் ஒருங்குறியில் 2 குறிகள். ஒரு குறி அல்ல. அப்படித் தான் தமிழ் ஒருங்குறி அமைக்கப்பட்டு இருக்கிறது. இப்போது நீங்கள் உங்கள் இடுகைக்கு “நான்” என்று தலைப்பைக் கொடுத்தால் அது உண்மையில் 4 குறிகள். இணைய முகவரிக்கு 255 எழுத்துக்களை தாண்டக் கூடாது என்பது விதியாகும். இப்போது நீங்கள் ஒரு பெரிய தமிழ் பெயரைக் கொடுத்தால், மீதமுள்ள எழுத்துக்கள் காணாமல் போய்விடும். அப்போ உங்கள் இடுகைகள் தெரியாமல் “404 – Page Not Found” என்று காட்டும் அல்லது பின்னூட்டமிட முடியாமல் இருக்கும். இந்த 255 எழுத்துக் கட்டுப்பாடே இதற்குக் காரணம்.
இதே 255 எழுத்து கட்டுப்பாடுதான் தமிழ் குழுமங்களில் தமிழில் தலைப்பை வைத்து அதற்கு மறுமொழி மின்னஞ்சலூடாக அனுப்பும்போது இழை பிரிந்து புதியதோர் இழை உருவாகுகிறது. ஒரு மிக நீண்ட எழுத்துக்களைக் கொண்ட தலைப்பில் கடைசியில் சில ஒருங்குறி குறிகள் வெட்டப்பட்டாலுமே அவை புதிய இழையாகிவிடும். கவனிக்கவும். நான் இங்கு எழுத்து என்னும்போதெல்லாம் தமிழின் ஒரு எழுத்தைக் குறிப்பிடவில்லை. தமிழ் “போ” என்பது ஒருங்குறியில் 2 குறிகள். அதே இணைய முகவரியில் இந்த இரண்டு குறிகளுமே மேலும் பல குறிகளாக மாற்றித் தான் உபயோகப்படுத்தப்படுகிறது. தமிழில் இரண்டெழுத்து தலைப்பு இணைய முகவரியாகும்போது பல எழுத்துக்கள்!
இதை சரி செய்ய வழிகள்:
- இடுகைகளுக்கு எந்தத் தலைப்பையும் கொடுக்காமல் முதலில் பிரசுரியுங்கள். வலைப்பதிவு மென்பொருள் [WordPress/ Blogspot] தானாகவே ஒரு இலக்கத்தைக் கொடுத்து சேமிக்கும். பின் அந்த இடுகையை திருத்த முயற்சி செய்து [edit], உங்களுக்கு விருப்பமான தலைப்பை கொடுக்கவும். இப்போ உங்கள் இடுகை ஒரு இலக்கமாக சேமித்து இருந்தாலும், மற்றவர்களுக்கு இடுகைத் தலைப்பு சரியாக உங்கள் விருப்பம் போல் தெரியும்.
- இடுகைகக்கு ஆங்கில தலைப்பைக் கொடுங்கள். பிரசுரித்த பின் மீண்டும் திருத்த முயற்சி செய்து [edit] உங்களுக்கு விருப்பமான தலைப்பை [தமிழிலோ] கொடுக்கலாம். இப்போ உங்கள் இடுகை ஆங்கில சொற்களால் சேமித்து இருந்தாலும், மற்றவர்களுக்கு இடுகைத் தலைப்பு சரியாக உங்கள் விருப்பம் போல் தெரியும்.
- WordPress உபயோகிப்பவர்களுக்கு மட்டும்:
நீங்கள் புதிய இடுகை எழுத எத்தணிக்கும் போது உங்கள் வலது புறத்தில் சிறு சிறு தகவற் துளி போல் இருக்கும். அதில் “Post Slug” என்பதைக் கண்டு பிடியுங்கள். அதற்கு அருகாமையில் இருக்கும் ‘+’ சக குறியை தட்டி விரித்தால், ஒரு பெட்டி வரும். அந்தப் பெட்டிக்குள் நீங்கள் விருப்பமான ஆங்கில (அ) எண்ணில் தலைப்பை கொடுக்கலாம். அதே நேரத்தில் “Write Post” என்பதற்கு கீழ் உள்ள “Title” என்னும் இடத்தில் தமிழில் தலைப்பைக் கொடுக்கலாம். இது மேலே சொல்லப்பட்ட மேலதிக வேலையை இல்லாமல் ஆக்குகிறது.
பி.கு.: தேடு தளங்கள் [Search engines] இணைய முகவரியில் வரும் சொற்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும். ஆகவே, நீங்கள் உங்கள் இடுகையை எண் கொடுத்து சேமித்தால் (அ) “blog-spot_25” என்று சேமித்தால் உங்கள் இடுகையை கண்டுபிடித்து அதிக புள்ளி கொடுக்கும் சந்தர்ப்பம் குறையும். நீங்கள் ஆங்கில/ தமிழ் சொற்களில் சேமித்தால், அந்த சொற்களை தேடும்போது உங்கள் இடுகைக்கும் முக்கியத்துவம் கூட கொடுக்கப்படும், தேடு தளங்களால்.
ஆனால் இன்னும் ஒருங்குறியின் இரண்டாம் தர மொழிகளுக்கு [தமிழ் உட்பட] இணைய முகவரியில் போதுமான உதவி இல்லாததால், தமிழின் ஒவ்வொரு எழுத்துக்களும் “%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%” இப்படி குதர்க்கமாக பிரித்து தான் தெரியும். நீங்கள் உங்கள் இடுகையின் முகவரியை வேறொருவருக்கு கொடுக்க எத்தணிக்கும்போதோ (அ) உங்கள் வலைப்பதிவு பயனர் உங்கள் இடுகையின் இணைய முகவரியை வேறொருவருக்கு கொடுக்க விரும்பினால் உங்கள் இடுகையின் இணைய முகவரி மிக நீண்டதாக, குதர்க்கம் நிறைந்ததாக காணப்படும்.
சிறிய இணைய முகவரியாக வருவதற்காகவும், தேடு தளங்களில் உங்கள் இடுகையின் மதிப்பு அதிகரிக்கவும் இடுகைகளை ஆங்கில சொற்கள் [உங்கள் இடுகையின் கருத்து பொறிந்த சொற்கள்] கொண்டு சேமித்தல் நன்று என்பது என் அறிவுறை.
______
CAPital
5 Comments
Pingback:
bsubra
Thank you!
கடல்கணேசன்
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி.
-கடல்கணேசன்
நெல்லி
பயனுள்ள தகவல்களுக்கு நன்றி
Pingback: