ராஜீவ் காந்தியின் கொலை தப்பா? ? [02]
இந்தியா உணவுப் பொட்டலம் போட்டதாம் தமிழருக்கு. நானும் யாழ்ப்பாணத்தில் தான் வசித்தேன் அக்கால கட்டத்தில். அங்கு எவருக்கும் அப்படி ஒரு உணவுப் பொட்டலம் கிட்டியதாக எனக்குத் தெரிந்திருக்கவில்லை. பத்திரிகையில் போட்டிருந்தார்கள், இந்தியா காட்டுப் பகுதிகளாய்ப் பார்த்து போடுகிறதாம் என்று.
ஏதோ போட்டார்களே, அதில் சந்தோசப்பட்டுத் தான் ஐயா, நாங்களும் நம்பினோம். இந்தியா தமிழருக்கு உதவத் தான் வந்தது என்று. ஆயுதங்களைக் ஒப்படைக்க வைத்து, நிராயுதபணியாக சென்றவர்களைப் காப்பாற்றாமல், இந்தியாவின் பிச்சையை [அரசியல் பரிந்துரை, இந்தியா தன் மாகாணங்களுக்கும் குறைவான கட்டமைப்பையே பரிந்துரைத்தது] ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக எத்தனை எத்தனை புலி வீரர்களை கொன்றார்கள். எவ்வளவு சித்திரவதைகள் எமக்கு. கிழவி என்று கூட பார்க்காமல் கற்பழித்த நாசகார கும்பல்.
இலங்கை இராணுவம் கூட இவ்வளவு மோசமாக நடந்துகொண்டதில்லை முன்பு. உணவுப் பொட்டலத்தை பார்த்தேனோ இல்லையோ, செய்ன் ப்லொக்ஸைப் முதன் முதலில் பார்த்தது இந்திய இராணுவத்தால். இலங்கையில் “கன்டோஸ்” என்று ஒரு சாக்லட் வாங்கினால் அதனுடன் ஒரு ஸ்ரிக்கர் [sticker] வரும். அதில் வந்த செய்ன் ப்லொக்ஸைப் [chain blocks] பார்த்த எங்களுக்கு கண்ணுக்கு முன் பார்க்க மிக்க வியப்பாகவே இருந்தது. சாண் பாம்பென்றாலும் முழத்தடியால் அடி என்று சொல்வதுபோல், இந்தியா முழுப் பலம் கொண்டு புலிகளை அழிக்க எத்தணித்தது. அதுவரையும் எம் செவியில் கேட்காத சுப்பெர் சொனிக் [super sonic] விமானங்கள் கூட எங்கள் தலைக்கு மேல் பறந்தன. மிகவும் சக்திவாய்ந்த கெலிகொப்டர்கள், விமானங்கள் எல்லாம் இந்தியா தான் தமமிழனுக்கு முதலில் காட்டியது. நாங்கள் இவற்றிற்கு பெயர்கள் கூட வைத்திருந்தோம். “முதலை கெலிகொப்டர்” என்பது தான் கெலிகொப்டரில் பயங்கரமாக இருந்தது. அதன் சரியான பெயர் எனக்குத் தெரியாது. அதன் முகப்பில் பற்களும் நாக்கும் தீட்டப்பட்டிருக்கும்.
சும்மா கொழும்பில் இருந்த தமிழனும், தமிழ் நாட்டில் இருந்த தமிழனும், வெளிநாடுகளில் இருந்த தமிழனும் பத்திரிகையைப் படித்து விட்டு எதிர்க்கிறோம், துன்பப்படுகிறோம், வருத்தப்படுகிறோம் என்றவர்களுக்கு இந்த வலி தெரியாதையா.
அமெரிக்காவில் சூறாவளியால் பாதிக்கப்பட்டவரை ஏற்ற கெலிகொப்டர் கட்டிடத்திற்கு மேலே வர கீழே இருந்தவர்கள் கையை அசைத்தும் வேறு சமிஞ்ஞைகளும் காட்டுகிறார்கள். ஐயா தமிழீழத்தில் கெலி வந்தால் இப்படி கையை காட்ட இயலாது ஐயா. எங்கிருந்து வருகிறது, எங்கே வட்டமடிக்கிறது என்று ஒரு பதபதைப்பு. எங்கோ ஓர் சூட்டுச் சத்தம் கேட்டால், வேலைக்குச் சென்ற கணவனை நினைப்பதா, பள்ளிக்குச் சென்ற பிள்ளையை நினைப்பதா, திருமணமாகி வேறு இடத்தில் வசிக்கும் மகளை நினைப்பதா என்று சிந்திக்கவே நேரமில்லாமல் ஓடி ஒளிய இடம் தேடுவார்கள். ஒரே வீட்டுக்குள் அடுத்த அறையில் இருக்கும் தன் பிள்ளையைப் பற்றிக் கூட கவலைப்படாமல் ஒளியவேண்டிய கட்டாயம். தோட்டாக்களும், விமானத்தால் போடும் குண்டுகளும் எவ்வளவு வேகம் என்பதைப் புரிந்தவர்கள் நாங்கள். விமானம் வந்துவிட்டது என்றால், எல்லோரும் பங்கருக்குள் ஓடி ஒழிவார்கள். பங்கர் எப்படி இருக்கும் என்று கூட அறியாதவர்களுக்கு அந்த வேவதனை புரியாதையா. பங்கருக்குள் விஷ பூச்சிகள் கடித்து எத்தனை பேர் இறந்தார்கள். பாம்புகளுடனேயே பதுங்கி இருந்தவர்கள் ஐயா நாங்கள். இலங்கை இராணுவத்துடனான மோதலில் நாங்கள் பங்கர் கட்டவில்லை. இதை எழுதும் போது என் கண்கள் கலங்குகின்றன.
புலிகளுக்கும் இராணுவத்திற்கும் பெரும் சண்டையாம், ஆர்மி முன்னேறுதாம் என்றால் உடுக்க சில உடைகளும், கிடந்த பணத்தையும் நகைகளையும் ஒரு பொட்டலமாக துணியால் கட்டி, எங்கே செல்கிறோம், எப்படி இரவு நித்திரை கொள்ளப்போகிறோம் என்று கூடத் தெரியாமல், ஆட்டு மந்தைகள் போல் வெடிச் சத்தத்துக்கு எதிர்த் திசையில் நடந்தவர்கள் நாங்கள். எங்கள் நாட்டில் நாங்களே அகதிகள் என்னும் சொல்லை முதலில் உணர்த்தியது இந்திய இராணுவம். இலங்கை இராணுவத்துடனான போரில் [முன்பு] நாங்கள் யாரோ ஒரு தமிழனின் வீட்டில் இருந்தோம். இந்தியா இராணுவத்துடனான போரில் நாங்கள் கோயில்களிலும் பாடசாலைகளிலும் தங்கவேண்டிய நிலமை. தனியா இருந்தால் தானே கெடுக்கிறானே.
ராஜீவ் காந்தியைக் கொன்றதை, இந்திய ஆக்கிரமிப்புப் பகுதியில் இருந்த எந்தத் தமிழனும் தவறு என்று சொல்ல மாட்டான். அடி வாங்கினவுக்குத் தன்யா தெரியும் அதன் வலி. மணி அடிச்சா சோறு லைற் ஓவ் [light off] பண்ணினால் நித்திரை என்று இருந்தவர்களுக்கு இதெல்லாம் சொல்லிப் புரியவைக்க இயலாது.
ராஜீவ் காந்தியின் கொலை ஒரு துன்பியல் சம்பவம் என்று சொல்லலாம்; வரலாற்றுச் சோகம் என்று சொல்லலாம்; புலிக்கு மிகுந்த பின்னடைவு என்று சொல்லலாம் [அரசியல் ரீதியாக]; ஆனால் அது தவறு என்று மன்னிப்புக் கேட்பதோ, தலைவரை சரணடைய வேண்டுமென்பதோ இந்திய இராணுவத்தால் ஏற்பட்ட வலியை தாங்கியவனுக்கு இயலாத காரியம்.
இவ்வளவு துரோகமும், துன்புருத்தல்களும் செய்த இந்தியாவிடம் சரணடைவா? இதை விட மரணமே மேல்.
இலங்கை இராணுவத்தால் அவ்வளவு புலிகளைக் கொல்ல முடியவிலை. எவ்வளவு திறன் மிக்கவர்கள், பெரும் பதவியில் இருந்தவர்கள் எல்லாம் இந்திய இராணுவமே கொன்றது. பத்தாததற்கு, இந்தியாவின் RAW வேறு குள்ளநரி விளையாட்டு. அவ்வளவு புலிகளையும், அவர்களது சொத்துக்களையும் இந்தியா அழிக்காமல் விட்டிருந்தால், இன்று புலிகள் இன்னும் பலம் வாய்ந்தவர்களாக இருந்திருப்பார்கள் என்பதில் ஐயப்பாடில்லை. இந்தியாவாலேயே, தமிழீழம் கிடைப்பது தள்ளிப்போகிறது.
இலங்கை இராணுவம் எதிரி; இந்திய இராணுவம் துரோகி.
_____
CAPital
One Comment
Pingback: