நா(ன்)ம் ஏன் பிறந்(தேன்)தோம்? [01]
நா(ன்)ம் ஏன் பிறந்(தேன்)தோம்?
நானாக விரும்பிக் கேட்கவில்லை. நான் பிறக்கிறேன் என்று அறிந்திருக்கவில்லை. முன் பிறப்பில் என்னவாகப் பிறந்தேன் என்றும் அறிந்திருக்கவில்லை. அடுத்த பிறவியில் என்னவாகப் பிறப்பேன் என்றும் அறியேன். பிறப்பு இருக்கா என்று கூட அறியேன். இப் பிறவியில் என் செயற்பாடு, என் பிறப்பின் முக்கியத்துவம் ஏதும் அறியேன்.
ஏதோ என்னை ஓர் நதியிலே யாரோ தள்ளிவிட்டது போல், எனக்கே தெரியாமல் பிறந்து, நீரின் ஓட்டத்திலே அடிபடுவதுபோல், வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.
எல்லோரும் நல்லவனாக இரு, நல்லவனாக இரு என்று சொல்கிறார்களே, ஏன் நான் நல்லவனாக இருக்க வேண்டும்? மற்றவர்களுக்கு ஏன் நன்மை செய்ய வேண்டும்? வாழ்க்கையில் கெட்டவனாக இருந்தாலும் வாழலாம் தானே. கெட்டவர்கள் வாழாமலா போய்விட்டார்கள்? மிகவும் நல்லவர்கள் எல்லாம் நன்றாக வாழ்ந்தா போய்விட்டார்கள்?
கெட்டது செய்தால் என்ன, நல்லது செய்தால் என்ன; நான் தானே வாழ்கிறேன். ஏன் பயப்பட வேண்டும்? நானே படித்தேன். நானே பாடுபட்டேன். நானே என் திறமையால் முன்னுக்கு வருகிறேன். கொள்ளையடிப்பதென்றாலும், மற்றவர்களை ஏமாற்றுவது என்றாலும் அதுவும் என் திறமை தானே. அப்போ என்னை நம்பித் தான் நான் இருக்கிறேன்.
கடவுள் என்ன, நான் துன்பத்தில் இருக்கிறேன் என்று எப்போதாவது என் முன் தோன்றி எனக்கு உதவியிருக்கிறாரா, அல்லது வேறு எவருக்குமாவது உதவியிருக்கிறாரா? அப்போ கண்ணுக்குத் தெரியாத கடவுளை, துன்பத்தில் உதவாத கடவுளை, எங்குமே நேராக காணமுடியாத கடவுளை எண்ணி ஏன் நான் நல்லவனான இருக்க வேண்டும்? குறுக்கு வழியிலே என் திறமை கொண்டு நான் முன்னேறப் போகிறேன்.
நான் நல்லவன் என்று சொல்ல முடியாத செயல்களால் பாதிக்கப்படும் மற்றய மனிதர்களைப் பற்றி கவலைப் பட வேண்டுமா? அவர்கள் திறமை அற்றவர்கள்; அவ்வளவுந் தான். என் சாதுரியம், நான் வெல்கிறேன். நான் மேலே உயர வேண்டுமென்றால், இன்னொருவர் கீழே தாழ்த்தப் பட வேண்டுமல்லவா. நான் வெல்ல வேண்டும் என்றால், வேறொருவர் தோற்க வேண்டுமல்லவா. நான் ஓட்டத்திலே முதலாம் இடம் பெறவேண்டுமானால் யாரோ ஒருவர் தோல்வி பெற்று இரண்டாம் இடம் வரவேண்டும் தானே. அவர் இரண்டாம் இடம் வந்தால் தானே நான் முதலாம் இடம் என்று மார்தட்டிக் கொள்ளலாம். நான் முதலாளியாக இருக்கவேண்டுமானால் யாரோ தொழிலாளியாக இருக்கவேண்டும் தானே. நான் ஒன்றை விற்பனைசெய்கிறேன் என்றால் அதை பணம் கொடுத்து [இழந்து] வாங்க ஒருவர் வேண்டும் தானே. எல்லோருமே வென்றால், வெற்றி என்ற சொல்லுக்கே அர்த்தமில்லை.
எப்படியாயினும் நான் முன்னேற வேண்டும். எந்த வழி என்பது இப்போ பிரச்சினை இல்லை என்று முடிவாகிவிட்டது. நல்லவனாக வாழ்ந்தால், வெறும் பெயர் தான் மிச்சம். சாதுரியனாக, கெட்ட வழியே ஆனாலும், நான் வேண்டும் செல்வத்தை, சுகத்தைப் பெறலாம். இவ் உலகில் வேறு என்ன வேணும்? ஏன் பிறந்தேன்? பொருள் தேட; சுகம் அனுபவிக்க. எனக்கு தெரிந்த வரையில், ஏன் எல்லோருமே இந்த உலகில் நன்றாக வாழ வேண்டும் என்றே போராடுகிறார்கள். அப்போ அது தான் என் குறிக்கோள். அப்போ அது தான் இப் பிறபிப் பயன்.
______
CAPital