நாதியற்ற தமிழர் நாம் – 2
அனைவருக்கும் வணக்கம் _/|\_
உங்கள் யாரையும் குறை கூறுவதோ. புண்படுத்துவதோ என் நோக்கம் இல்லை அதைநீங்களும் அறிவீர்கள்.
என் தேசம் அங்கு இரத்ததில் குளிக்கும் போது என் இதயத்துடிப்புத்தான் இங்கு எழுத்துக்களாய் ஒலிக்கின்றது..
ஆனால், இந்திய ராணுவத்தினருடனான மனக் கசப்புகள் யாவும் அனுபவபூர்வமானவையே.
இந்திய இராணுவம் சமாதானப் படையாக இருந்த பொழுது, இந்திய பொருட்கள் தமிழீழத்தில் அதிகமாக கிடைத்தன. அதில் ஒன்று நெருப்பெட்டி [தீப்பெட்டி]. நெருப்பெட்டியில், ஒரு பக்கத்தில் படம் இருப்பது வழமை. இந்திய நெருப்பெட்டியில் இருந்த படம், ஒரு புலி பாய்கிறது, எதிரே நெற்பயிர்கள் அறுவடை செய்யும் அரிவாள். இந்தியா சும்மா வரவில்லை, கபட நோக்கத்தில் தான் வந்துள்ளது என்று எங்களுக்கு அப்பவே தெரியும்.
இந்திய-இலங்கை ஒபந்தம் யாருக்கு நன்மை? இந்தியா சிங்கள அரசாங்கத்துடன் கைகோர்த்து தமிழரை அழிக்க ஒரு ஒப்பந்தம். புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்தார்கள். லொறி லொறியாக ஆயுதங்கள் ஒப்படைக்கப் பட்டன. அதைப் பார்த்து நாங்களே யோசித்திருக்கிறோம், இனி புலிகளால் தலை எடுக்க இயலாது என்று. என்ன புலிகள் முட்டாள்களாக இவ்வளவு ஆயுதங்களையும் ஒப்படைக்கிறார்களே என்று. ஆனால், MGR ஆயுதங்களை கொடுத்தார், களவாக, இந்திய அரசாங்கம் அல்ல.
நான் ஆறாம் ஆண்டு படிக்கும்பொழுது, எனது சக மாணவனின் குடும்பத்தை சணல் பறந்த அடி. அவர்கள் வீட்டிற்கு அருகாமையில், குண்டு வெடித்தது காரணம். ஆறாம் ஆண்டு படிக்கும் எனது நண்பன் உயரத்தில் சற்று குள்ளமானவன், மற்றய மாணவர்களை விட. அவனையே அடித்தார்கள். நாங்கள் அவர்கள் வீட்டிற்கு சிறிது நேரம் கழித்து சென்றபோது, உடம்பில் இரத்தக் காயங்களுடன் தான் அவர்கள் இருந்தார்கள். அவனின் தந்தையை மரத்தில் சாத்தி தான் அடியாம். அடுத்த நாளே அவர்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள். அந்தக் காலத்தில் சிறுவர்களோ, பெண்களோ, வயோதிபர்களோ இயக்கத்தில் இருந்தது கிடையாது. இந்திய இராணுவம் தான் பாகுபாடின்றி எல்லோருக்கும் பயத்தை உண்டுபண்ணியது.
உங்களுக்கே தெரியுமோ தெரியாது, இந்திய இராணுவத்தில் “para troops” என்று ஒரு பிரிவு உள்ளது. அவர்கள் சற்று குள்ளமாகவே இருப்பார்கள். அதற்கு காரணம் எனக்குத் தெரியாது. இவர்களிடம் ஒரு வாள் இருக்கும்; கறுப்பு உடை அணிவார்கள். இந்திய இராணுவத்திலேயே இவர்கள் தான் மோசமானவர்கள். அப்போ இலங்கை இராணுவம் ஒரு வீட்டிற்கு அதன் முன்வழியாலேயே வருவார்கள். இந்திய இரணுவம் அப்படி இல்லை. வேலியைப் பிய்த்துக் கொண்டு வருவார்கள். திடீர் திடீர் என்று வருவார்கள். இதனாலேயே, பெண்கள் குளிக்கப் பயப்பட்டார்கள்.
தனியாக இருந்த பெண்களிடம் தப்பாக நடந்தது. ஏன் என் தாயார் தனியாக இருக்கும் பொழுது கூட ஒரு இந்திய இரணுவம் வீட்டிற்கு உள் நுளைய முற்பட, அம்மா பக்கத்து வீட்டிற்கு சென்றுவிட்டார். அங்கே வந்த அவன், அம்மாவை எங்கள் வீட்டிற்கு செல்லும்படி சொன்னான். எங்கள் அம்மா ஒரு பைத்தியம் போல் நடிக்க, அந்த வீட்டுக்காரர்கள், எங்கள் அம்மாவிற்கு சற்று மூளை குழப்பம் என்று சொல்லி விட்டதால் அவன் திரும்பி சென்றுவிட்டான்.
ராஜீவ் காந்தியை கொன்றதை ஞாயப்படுத்த எத்தணிக்கவில்லை. ஆனால், இந்தியா மீது தமிழீழதில் கடுமையான கோபமே இருந்தது. இந்தியா ஒருகையால் புலிகளை அழித்து மறு கையால் தமிழரை அரவணைக்கிறோம் என்று காட்ட முற்பட்டது. புலிகள் என்ன பாலஸ்தீனத்தில் நடப்பது போல், பொது மக்களுக்கா குண்டை வைத்தது. சந்தையிலும், வீதிகளிலும், சமைய தலங்களுக்கும் முன்பா குண்டை வைத்தது? இந்திய இராணுவம் தமிழீழத்திற்கு வந்து இவ்வளவு அட்டூழியங்களும், கொலைகளும் செய்ய காரணமாக இருந்தாரோ, அவருக்கே குண்டு வைத்தது.
எங்கள் நாட்டிற்கு படை அனுப்பி, பலரைக் கொன்று, பல சித்திரவதைகள், வயது வித்தியாசம் இல்லாமல் அடிகள், கற்பழிப்புகள் எல்லாம் செய்த இந்தியாவின் மீது எவ்வளவு கோபம் இருக்கும்?
இதில் என்ன கவலை என்றால் தமிழ் நாடு அரசு சார்பாக ஈழத்தமிழருக்கு ஆட்சேபனையோ, அல்லது ஆதரவாகவோ குரல் கொடுக்காதது தான். அப்படிக் குரல் கொடுத்த சிலரும் சிறையுள் தள்ளப்பட்டார்கள்.
-
சேர்க்கப்பட்டது I (2007/07/12 @ 9:40 am):
2007ம் ஆண்டு வெளியான “கறுப்பான கையாலே என்ன புடிச்சா[ன்]” என்னும் தமிழ் திரைப்படப் பாடலில் ஒரு வரி “வெட்டும் புலி நெருப்பெட்டி போல்…” என்று வருகிறது.
_____
CAPital