சேரனின் “Autograph” படத்தை உங்களுக்குப் பிடித்திருந்தால் நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய படம் “பள்ளிக்கூடம்”.
அதே போல் பழைய நினைவுகளை அசை போட்டு யதார்த்தத்தை படம்பிடித்திருக்கிறார்கள். பாடசாலை போன அனைவருக்கும் ஓர் உணர்ச்சிக் காவியமாக பொங்கி வழியும் என்பதில் ஐயமில்லை. பாடசாலை போகாதவர்களை கட்டாயம் ஏங்க வைக்கும்.
சினேகா [கோகிலாவாக] மிகச் சரியான தேர்வு. உணர்ச்சிகளை அழகாக வெளிப்படித்தியிருக்கிறார். அட தங்கர் பச்சான் [படத்தின் இயக்குனர்] கூட அழகாக நடித்திருக்கிறார் “ஐயோடி குமரு” ஆக.
பாடல்கள் அற்புதமாக இருக்கிறது. இசையும் வரியும் மனதிற்கு நெகிழ்ச்சியைக் கொடுக்கிறது. குத்துப் பாட்டை எதிர்பார்க்காதீர்கள். ஆனால், இள வயது கதாநாயகன், கதாநாயகியாக இருவர் நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்று ஒரு பாட்டு வரும். அது இளவட்டங்களை ஏங்கவைக்குதோ (அ) தூங்க விடாமல் வைக்குதோ தெரியாது. கிராமத்துக் கலாச்சாரத்தில் இவ்வளவு நெருக்கமாக காட்டியுருப்பது சற்று அதிகமோ என்று யோசித்தால் கூட, அது பாட்டில் மட்டுமே என்பதால் பரவாயில்லை என்பது என் எண்ணம்.
சினேகாவின் நடிப்பை சொல்லி வேலையில்லை. படத்தைப் பாருங்கள். நெற்றியிலிருந்து கழுத்துவரை நடிக்கிறது.
எனக்கு இந்தப் படத்தின் தாக்கம் சற்றுக் குறைவாகவே இருக்கிறது. ஏனெனில், இலங்கையின் இனப்பிரச்சினை காரணமாக், நான் ஒரு பள்ளிக்கூடத்தில் என்று நெடுங்காலம் படிக்கவில்லை. இலங்கை இராணுவ ஆக்கிரமிப்பு, இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு என்று எப்போதும் ஊர் விட்டு ஊர் ஓடிக்கொண்டே இருந்ததால் ஒரு பள்ளிக்கூடத்துடனும் எனக்கு நெருக்கமான உணர்வு உருவாகவில்லை.
சரி என்னைப் போல் களவாக படத்தை இணையத்தில் தரையிறக்கி கணினியில் பார்க்காமல், திரையரங்கிற்குச் சென்று பாடசாலை நண்பர்களுடன் பாருங்கள்.