விடுமுறைக்கு Toronto சென்று மீண்டும் Montreal வரும்போது, தமிழ் பேரூந்தில் இந்தப் படத்தைப் போடுங்கோ என்று எனது குறுந்தட்டைக் கொடுத்தேன்.
ஈழப் படம் போல் இருக்கே என்று கொஞ்சம் ஆவலாக பார்க்கத் தொடங்கினேன். நான் இதற்கு முன் இந்தப் படம் பற்றிக் கேள்விப்படவே இல்லை.
முதல் காட்சியிலேயே அவர் கதைக்கும் ஆங்கிலத்தை வைத்து லண்டனில் இருந்து வருபவர் என்று அறிந்துகொண்டேன். அவர் கதைக்கும் தமிழ் சற்று வித்தியாசமாக இருந்தது. தமிழின் ஒவ்வொரு சொல்லையும் அழுத்தி முடிக்க மாட்டார். ஏதோ சிங்களவன் (அ) மலை நாட்டுத் தமிழர்கள் தமிழ் பேசுவது போல் இருந்தது. சரி லண்டனில் இருந்தவர் தமிழை மறந்திட்டார் என்று யோசித்துக்கொண்டேன்.
படத்தின் முன்கதை [flashback] மிக நீளமாக இருந்தது. காட்சியமைப்பு மிகவும் நன்று.
சரி விசயத்திற்கு வருவம். படத்தில், பாடசாலைக்குச் செல்லும் வளியில், இளைஞன் ஒருவனைக் கூட்டிச்செல்ல சக இளைஞனர்களும், யுவதிகளும் துவிச்சக்கர வண்டிகளில் [bicycle] வருவார்கள். அவர்களுக்குள் கதைக்கும் ஆபாச வசனங்கள் காது கூச வைக்கிறது. உண்மையில் வன்னியில் கதைத்திருக்கலாம். அதாவது, ஆண்கள் குழுமமாக இருந்திருந்தால் கதைத்திருக்கலாம். அதே போல் பெண்கள் மட்டும் இருந்திருந்தாலும் கதைத்திருக்கலாம். ஆனால், இருபாலாரும் சேர்ந்து இவ்வளவு ஆபாச பேச்சு நம்பும்படியாக இல்லை.
அதில் தொடங்கிய ஆபாசப் பேச்சு படம் முழுக்க தொடர்கிறது. ஏனடா இந்தப் படத்தைப் போடச்சொல்லி சாரதியிடம் கொடுத்தேன் என்று எனக்கு இருந்தது. பாடசாலையில் ஆசிரியையும் ஆபாச பேச்சுத் தான். அது ஒரு ஆண் ஆசிரியர் கதைத்ததாக இருந்திருந்தாலும் நம்பி இருக்கலாம்.
ஊரில், பெண்களுடன் சேர்ந்து ஒரு group project செய்வதற்கே மிகக் கடினம். ஆண்கள் வேறாக, பெண்கள் வேறாகத் தான் பிரித்து விடுவார்கள். இதில் இவ்வளவு ஆபாச பேச்சுக்கள் பெண்களே கதைப்பதாகக் காட்டியிருப்பது ஏன் என்று புரியவில்லை. அட அதைக் கூட நாசூக்காகச் சொன்னால் கூட பறுவாயில்லை. பச்சை பச்சையாக எல்லா இயக்குனர் சொல்ல வைத்திருக்கிறார்.
மற்றது, அடிக்கடி “தோட்டக்காட்டு…” என்று சொல்லித் தான் மலைய தமிழர் குடும்பத்தை பேசுகிறார்கள், முதலாளிகள். தொழிலாளியை, முதலாளி மதிப்புக்குறைவாக நடத்துவது ஒன்றும் புதிதான விடயமல்ல. எல்லா இடத்திலும் கூலித் தொழிலாளிகளைக் கேவலாமகத் தான் நடத்தினார்கள். ஆனால், “தோட்டக்காடு” என்பது ஏதோ ஒரு சாதி போல் அதைச் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கிறார் இயக்குனர். சில நேரத்தில் மலையகத்தில் அவ்வாறு இருந்திருக்குமோ தெரியவில்லை. ஊரில், குறைந்த சாதிக் காரர்களை ஒரு போதும் சாதி சொல்லிக் கூப்பிடுவதில்லை. அவர்களுடைய பெயரைச் சொல்லியோ, அல்லது செல்லப் பெயரைச் சொல்லியோ கூப்பிடுவார்கள். தங்களுக்குள் கதைத்துக்கொள்ளும் போது தான் சாதி சொல்வார்கள்.
இந்திய திரையில் வரும் வில்லன்கள் போல், மச்சி நீ அவளை “முடிச்சிட்டு” எனக்குத் தா என்று இளைஞர்களைக் கதைக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.
ஈழக் கலைஞர்கள் அவ்வளவு பேரும் ஏதோ மலையக (அ) சிங்கள தமிழர்கள் தமிழ் கதைத்தது போல் பேசுகிறார்கள். உ+ம்: “ஏன்” என்று உச்சரிக்காமல்” “ஏ[ன்]”… என்று அழுத்தம் குறைவாகவே உச்சரிக்கிறார்கள். வன்னித் தமிழ் இவ்வளவு திரிபடைந்ததா என்று தெரியவில்லை.
சரி, எல்லாவற்றிற்கும் ஒரு மணிமுடி வைத்தது போல், தென்னந்த் தோப்பில் ஒரு BBQ Party. கோழி பொரிச்சு கிழவிமார்கள் டிஸ்கோ டான்ஸ்! யுவதிகள் போட்டிருக்கும் உடையென்ன, அவர்கள் ஆடும் ஆட்டம், வயது போனவர்கள் கூட டிஸ்கோ டான்ஸ் ஆடுகிறார்கள், அதுவும் துணை மாற்றி! கன்றாவி! இயக்குனர் அவர்கள் எல்லோரும் லண்டனில் இருந்து வந்தவர்கள் என்று காட்டியிருந்தாலும் தப்பி இருப்பார்.
வன்னி, கனகராயன் குழம் புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதி போல் தெரியவில்லை. ஏனெனில், இலங்கை காவல்துறை ஒரு விசாரணைக்காக வருகிறது. வந்து, இந்திய சினிமாவில் லஞ்சம் வாங்குவது போல் இங்கேயும் வாங்கிச் செல்கிறது. இறுதியில், இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியில் ஒரு இளைஞன் கையில் துப்பாக்கி எப்படி என்றும் தெரியவில்லை. இயக்கம் வருவதாக ஒரு கட்டம். ஆகா, சிங்களத் திரைப் படத் தாக்கம்.
படத்தில், இந்திய/ சிங்கள திரைப் படத் தாக்கம் அதிகமாகவே தென்படுகிறது.
வன்னி, கனகராயன் குழத்தில் வசித்தவர்கள் ஏதாவது சொன்னால் தான் தெரியும், உண்மையில் இப்படியான சமூகம் இருந்ததா இல்லையா என்று. யாராச்சும் அப்படி இருந்து இந்தப் படத்தைப் பார்த்தால் இங்கே உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்.
11 comments
இவ்வாறெல்லாம் படம் எடுக்கிறார்களா ???
நினைக்கவே வெட்கம் …
வணக்கம்,
மண் படம் கனகராயன் குளம் எனும் இடத்தை சுற்றி கதை நகர்வதாகவே எடுக்கப்பட்டுள்ளது, உண்மையில் படம் அங்கு படமாக்கப்படவில்லையாயினும் கதைக்களம் கனகராயன் குளம் தான்
1, உங்கள் சந்தேகம் இலங்கை காவல் துறை பற்றிய சந்தேகம்- கதை நினைவு மீட்டலில் நடக்கிறது (பிளாஸ் பாக்), அதன் படி கதை நடைபெற்ற காலம் 1980 களின் ஆரம்பம், அப்போது இல்ங்கை காவல்துறை தான் முழுப்பகுதியிலும் இருந்தது, அப்போது விடுதலைப்புலிகள் அமைப்பு நிலப்பகுதிகளை கட்டுபாட்டில் வைத்திருக்கவில்லை,
2, மீண்டும் கதைக்களம் 1980 காளின் ஆரம்பம் என்பதை கருத்தில் எடுத்து அப்போது விடுதலைப்புலிகளின் காட்டுப்பாடு பெரிதாக இல்லை என்பதயும் நினைவில் கொண்டால்
தோட்டகாட்டர் என தொழிலாழியாக இருந்த மலையக மக்களை அப்போது முதலாளி மார் அல்ல பொதுவாக அனைவருமே சொல்லுவது வழக்கமாக இருக்கும் போது, முதலாளி மார் வாய்க்கு வாய் சொல்வதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை,
மற்றைய காட்சிகள்இ நீங்கள் சொல்லும் விடயங்கள் இந்திய தமிழ் சினிமாவை பின் பற்றி எடுக்கப்பட்டவை,
இவை பற்றிய மேலும் விளக்கம் அல்லது வேறு ஈழத்து பதிவர்களுடைய பார்வை எப்படி இருந்தது என அறிய நீங்கள்
வசந்தன்
பொறுக்கி
இருவரது வலைப்பதிவுகளில் வந்த மண் படம் பற்றிய பார்வையை படிப்பது நல்லது,
நன்றி சந்திரன் அவர்களே, உங்கள் வருகைக்கும், கருத்திற்கும்.
என்னமோ, எனக்கென்றால், படம் பிடிக்கவேயில்லை. பல விடயங்கள் பார்ப்பவர்களைக் கூச வைப்பதால், எனக்கு அதிக கோபமே வெளிப்படுகிறது. எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல், ஒரு BBQ party. தாங்கமுடியவில்லை.
ஈ கலப்பை பாவித்து எழுதினேன்,
http://vasanthanin.blogspot.com/2007/01/blog-post_11.html
http://porukki.weblogs.us/2007/03/02/mann/
மிக்க நன்றி சந்திரன் அவர்களே
நான் யாழ்ப்பானத்தில் “தோட்டக்காட்டான்” என்ற சொல்லைக் கேள்விப்படவேயில்லை. அட யாழ்ப்பாணத்தில் எங்கே மலைத் தோட்டங்கள். ஆனால், மலையக தமிழர்களும் யாழ்ப்பாணத்தில் வசித்திருக்கவில்லை.
சாதிப் பிரச்சினை தெற்காசியாவிற்கே பொதுவான சாபக்கேடு. யாழ்ப்பாணத்திலும் சாதி வேறுபாடுகள் இருந்தன. ஆனால், “தோட்டக்காட்டான்” என்று எவரையும் கூறியதில்லை. இதற்கு காரணம் மலையகத் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் இல்லை என்பதாக இருக்கலாம்.
சயந்தன் அவர்கள் எழுதிய இடுகையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்
————————–
யாழ்ப்பாணத்திலிருந்து வன்னி சென்ற பின்னர் தான் படங்களில் கவனிப்பு பெறாத தமிழகத்தின் பல கிராமங்களைச் சேர்ந்தவர்களின் வட்டார வழக்கு மொழியை எதிர் கொண்டேன்.
வன்னியில் நாமிருந்த பகுதிகளில் பெருமளவு வசித்தவர்களின் பூர்வீகம் இந்தியா!
மலையகத்தில் வாழ்ந்து வந்தவர்கள் இலங்கையின் இனக்கலவரங்களோடு வன்னிப் பகுதிகளுக்கு வந்து காடு வெட்டி வாழ்விடம் அமைத்து இன்று அந்த மண்ணின் குடிகளாகி இருக்கிறார்கள்.
நாமிருந்த தென்னங்காணியின் முழுப் பராமரிப்புப் பொறுப்பிலிருந்தவரின் பூர்வீகம் இராமநாதபுரம்! அது போலவே அங்கு பணிபுரிந்த பலர் தமிழகத்தோடு பிணைக்கப்பட்டிருந்தார்கள்.
————————-
http://sayanthan.blogspot.com/2005/03/blog-post_111122203232314793.html
வன்னி என்பது மக்கள் செறிந்து வாழ்ந்த இடம் அல்ல. மரங்கள் செறிந்து வாழ்ந்த பிரதேசம். இதனால் தான் புலிகள் தங்கள் தலமை அலுவலகங்களை அங்கே வைத்தார்கள்.
எவரெவர் இடம்பிடித்தார்களோ, அவரவர்கள் காணிச்சொந்தக்காரர் ஆனார்கள். அந்தக் காலத்தீல், இனக்கலவரத்தின் தாக்கத்தால் பல மக்கள் இடம்பெயர்ந்தார்கள். முதலில் வந்தவர் முதலாளி ஆனார். 1950 களில் நடந்த இனக்கலவரத்திற்குப் பின் இடம்பெயர்ந்தவர்கள் பெரும் முதலாளிகள் ஆனார்கள். 1970 களில் நடந்த இனக்கலவரத்திற்குப் பின் இடம்பெயர்ந்தவர்கள் சிறு முதலாளிகள் ஆனார்கள்.
//நான் யாழ்ப்பானத்தில் “தோட்டக்காட்டான்” என்ற சொல்லைக் கேள்விப்படவேயில்லை. அட யாழ்ப்பாணத்தில் எங்கே மலைத் தோட்டங்கள்.//
மீண்டும் வணக்கம்.
உங்கள் வயது சரியாக தெரியவில்லை அது தேவையும் இல்லை தான்.
ஆனால் யாழ்பாணத்தில் மலையக மக்கள் பெருவாரியாக / வன்னி பெரு நிலப்பரப்பை போல குடியிருக்கா வில்லை என்பதும் உண்மை தான்.
ஆனால் அவர்கள் யாழ்குடா நாட்டில் பணகாரர்கள் வீட்டு வேலைகாரர்களாக 30 ஆண்டுகளுக்கு முன் இருந்தார்கள என்பதை நீங்களோ நானோ நேரில் கண்டு அனுபவிக்க வில்லை என்பதற்காக அவ்வாறான ஒன்று இல்லை என்பதாக சொல்ல முடியாது.
உங்களதோ/ சயந்தன், எனதோ நினைவு தெரியும் பருவத்துக்கு முந்திய கதைகள் அவை.
ஆனால், கதை வன்னியில் நடந்ததாகத் தானே சொல்லி இருக்கிறார்கள்.
எனது தந்தை அரசாங்க உத்தியோகத்தர். ஆறு மாத காலத்திற்குள் சிங்களம் படித்து பரீட்சையில் சித்தி பெறவேண்டும் என்ற இலங்கை அரசின் சட்டத்தில் சித்தி பெற்றவர். ஏன் சொல்கிறேன் என்றால், இலங்கையில் அனேகமான ஊர்களுக்கு உத்தியோக பூர்வமாக இடம்மாறி வசித்திருக்கிறோம். அவர் முதன் முதலில் வேலை செய்தது வன்னியில் தான். வன்னியில் எப்படி காணிச்சொந்தக்காரர் ஆனார்கள் என்று அவர் சொல்லியிருக்கிறார்.
யாழ்ப்பாணத்தில் இந்திய தமிழர்கள் வணிகம் செய்வதற்காக வந்திருக்கிறார்கள். அதாவது, படகில் வந்து வீதி வீதியாக விற்று பின் திரும்பவும் இந்தியாவிற்கு திரும்புகிறவர்கள். தமிழகத்திற்கும் வடமறாட்சிக்கும் படகு போக்குவரத்து மிக சாதாரணமாக நடந்துவந்தது. புடவை, கிலுட்டு நகை, தமிழ்ப்பத்திரிகை, சஞ்சிகை, புத்தகங்கள் என்று பல இறக்குமதி செய்யப்பட்ட காலம். வடமறாட்சியில் இருந்திருந்தீர்கள் என்றால் இது தெரிந்திருக்கும். அனேகமாக ஒவ்வொரு நாள் இரவும் கள்ளக் கடத்தல்கள் நிகழும். அட ஆயுதம் இல்லைங்க. அப்ப எங்க இதெல்லாம். இலங்கை அரசுக்கு வரி செலுத்தாமல் தங்கக் கட்டிகள் கொண்டுவருவதற்காக நடைபெற்றது. இப்படி தங்கக் கட்டிகள் வேறு சிலர் கைக்கு அகப்பட்டதால், அவர்கள் திடீர் பணக்காரர் ஆன கதைகளும் இருக்கிறது. ஏன் கைரேகைச் சாத்திரம், உடுக்கடித்து சாத்திரம் எல்லாம் அந்தக் காலத்தில் தமிழகத்தில் இருந்து வந்து இங்கே சில நாள் சொல்லிவீட்டு பின் திரும்புகிறவர்கள் இருந்தார்கள். அட அப்போ தேங்காய் ஏற்றுமதிசெய்யப்பட்டதாம் தமிழகத்திற்கு.
ஆனால், எவரும் கூலி வேலைசெய்ததாக எனக்கு ஞாபகமில்லை. என் தந்தையும் சொல்லவில்லை.
ஆனால் கதையின் படி வன்னியில் தான் நடந்தது.
சரி ஒரு விதண்டாவாதம்:
///ஆனால் அவர்கள் யாழ்குடா நாட்டில் பணகாரர்கள் வீட்டு வேலைகாரர்களாக 30 ஆண்டுகளுக்கு முன் இருந்தார்கள என்பதை நீங்களோ நானோ நேரில் கண்டு அனுபவிக்க வில்லை என்பதற்காக அவ்வாறான ஒன்று இல்லை என்பதாக சொல்ல முடியாது.///
2000 வருடத்திற்கு முன்பு யேசு என்பவர் இருந்தார் அவர் கடவுளின் பேரில் நன்மை செய்தார் என்று சொன்னதை உலகில் அதிகமானவர்கள் நம்புக்கிறார்கள் தானே. உலகின் மிகப்பெரிய மதம் அது.
5000 வருடத்திற்கு முன்போ அதற்கு முன்போ கடவுள் அவதரித்தார் என்று சொன்னதை நம்பிக்கொண்டிருக்கும் மதம் உலகின் மூத்த மதம்.
இவற்றிற்கு எதிர்மறையாக நீங்கள் பார்த்தீர்களா? உங்களுக்குத் தெரியுமா என்றும் கேட்கலாம். இப்படியே போனால், கடவுள் நம்பிக்கையே இல்லை, ஆகவே நான் ஏன் நன்மை செய்ய வேண்டும் என்ற கேள்வியும் எளலாம்.
சரி, நான் சொல்ல வந்தது, யாழ்ப்பாணத்தில் “தோட்டக்காட்டான்” என்பது ஒரு பழக்கமில்லாத சொல். ஒரு சிலர் பாவித்திருக்கலாம், அதற்காக, இது தான் பழக்கம் என்று சொல்ல இயலாது. வன்னியில் நடந்திருக்கலாம், கிழக்கில் நடந்திருக்கலாம். ஏன் மலையகத்தில் இன்னும் நடக்கிறது.
எனக்கும் இந்த படம் பார்க்கவேண்டும் என்ற ஆசை உள்ளது. துபாயில் தேடினேன் கிடைக்கவில்லை. ஏதேனும் வலைதளத்தில் இருந்து எடுக்கமுடியுமா? தெரிந்தால் தளத்தின் பெயர் கொடுங்கள்.
நன்றி
கண்ணன்
துபாய்
கண்ணன் அவர்களே,
இலங்கையில் எடுக்கப்பட்ட படங்கள் அனேகமாக இணையத்தளங்களில் காணப்படுவதில்லை.
நன்றி உங்கள் வருகைக்கும், கருத்திற்கும்.
ஆபாசத்தை மனிதன் எண்ணங்களிலும்
சொற்களிலும் செயலிலும் பிரதிபலிப்ப்து
காலந்தோறும் நடப்பது என்பது நியதியாகி
நிற்கிறது.