சனநாயகம் மட்டும் தான் நல்ல வழி என்றில்லை.
சனநாயகம் என்ன சொல்கிறது? பெரும்பான்மை மக்களின் விருப்பிற்கு செல்வது சரி என்கிறது. அப்படியாயின் சிறுபான்மை மக்களின் பேச்சு எடுபடுவதில்லை தானே.
உலக நாடுகள் சனநாயகம் என்று சொல்பவர்கள் உண்மையில் அதைத் தான் செய்கிறார்களா? பாலஸ்தீன காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு சுதந்திர வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்று வந்தது. உடனே “சனநாயக” நாடுகள் என்ன சொன்னன? உதவிகள் அனைத்தையும் ரத்து செய்கிறோம். பொருளாராதாரத் தடை அந்தத் தடை இந்தத் தடை எல்லாம் போட்டன. அப்போ உண்மையில் இவர்கள் விருப்பம் சனநாயகம் தானா?
இதே சந்தர்ப்பத்தை அமெரிக்காவில் பாருங்கள். புஷ் போரை ஆரம்பித்த பின் நடைபெற்ற வாக்கெடுப்பில் புஷ் இக்குத் தான் பெரும்பான்மை. அவர் தன் போர் சரி என்று மேலும் தொடர்ந்தார். அப்போது இந்த “சனநாயத்தை” விரும்பும் நாடுகள் ஹமாஸ் இற்கு நடந்துகொண்டது போல் நடந்தனவா?
இதற்காக சனநாயகத்தைக் குறை கூறவில்லை. ஆனால், உலகிலேயே சனநாயகத்தை அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்திய நாடுகள் கூட தங்கள் நலனுக்காக சனநாயகத்தை ஓரந்தள்ளக் கூட தயங்குவதில்லை. ஆனால் நாம், நம் நாடு குட்டிச்சுவராகப் போனாலும், மக்கள் செத்து மடிந்தாலும், இயற்கை வளம் அழிந்தொழிந்தாலும் நம் சனநாய விசுவாசத்தை [அடிமை விசுவாசம் என்று வாசிக்கவும்] பறைசாற்றி முட்டுக்கொடுத்து வருகிறோம்.
எங்கள் நாட்டின் கட்டுக்கோப்பான வளர்ச்சிக்கு எது அவசியமோ அந்தப் பாதையை நாம் சுயபுத்தியில் தேர்ந்தெடுக்க வேண்டும். யாரோ சனநாயகம் தான் சிறந்த வழி என்று சொல்கிறான் என்பதற்காக அந்தப் பாதையில் நடக்க வேண்டாம். நம் நாட்டிற்கு ஏற்றாற்போல் சனநாய வழியாக இருந்தால் கூட சில மாற்றங்களுடன் [அது சனநாயகத்திற்கு எதிராக இருந்தாலும்] செய்து நாட்டை கட்டுக்கோப்பாக வளரச் செய்
என்னைப் பொறுத்தவரையில் சனநாயகம் ஓரளவு வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கே பொருத்தம். சனநாயகத்தில் ஒரு முன்னெடுப்பை நடைமுறைப்படுத்த மிக நீண்ட காலம் எடுக்கும். வளர்ச்சி அடையாத, புதிதாக உருவாகிய நாடுகளுக்கு சனநாயத்தை விட அதிக கட்டுக்கோப்புடைய கட்டமைப்பே சிறந்தது. பையப் பைய சனநாயகத்திற்கு நாட்டை திருப்பலாம்.
சீனாவைப் பாருங்கள். இரும்புக் கரம் கொண்டு நாட்டை கட்டுக்கோப்பாக, உள்ளாட்சியை நிலைநாட்டினார்கள். வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன் அனுமதியே இல்லை. சனநாயகம் தான் தங்கள் வழி என்று எடுக்காமல், தம் நாட்டிற்கு எது சிறந்தனவோ அதைச் செய்கிறார்கள். இப்போது நாடு சற்று முன்னேறி விட்டது, அடிப்படைக் கட்டுமானங்கள் திறம்பட இருக்கின்றன. இனிமேல் சற்று இளக்கப்பாடான முறையைக் கையாளலாம் என்று தொடருகிறார்கள்.
தொடர்புடைய இடுகை:
சனாதிபதி/ பாராளுமன்றத் தேர்தல்