நான்…
நான் காதலிக்கப் போகின்றேன்
ஆமாம்
நான் காதலிக்கப் போகின்றேன்
என்னைத் தேடி அவள் வருவாளென
காத்திருக்காமல்
நான் காதலிக்கப் போகின்றேன்

பாடசாலை
படிக்கும் போது என்ன காதல்
பலரும் பேசுவார்களே என்றெண்ணி
பல்லைக் கடித்துக் காத்திருந்தேன்

மேற்படிப்பு
படிக்கும் போது
பாதியிலே குழப்பாதே
பார்த்தவர்கள் பளிப்பார்களே என்று
பொறுமையுடன் பொறுத்திருந்தேன்

அதுவும் முடித்தபின்னே
வேலையில்லாமல் உனக்கென்ன காதல்
சம்பாதிப்பவர்கள் கேட்பார்கள் என்று
கடுகதியில் வேலையைத் தேடிக்கொண்டேன்

கரங்களில் காசு வந்ததால்
கரையிலிருக்கும் பெற்றோரை மறந்துவிட்டான் – என்ற
பொல்லாச் சொல்லுக்குப் பயந்து
அமைதியாய் உழைத்துக் கொடுத்தேன்

சரி
படித்தும் முடித்துவிட்டேன்
பட்டத்தையும் பெற்றுவிட்டேன்
பயமின்றி பணத்தைப் பாவிக்க
பேர் சொல்லும் வேலையையும் எடுத்துவிட்டேன்
உழைத்தும் கொடுத்துவிட்டேன் – இனி
பாவி மனம் பொறுத்தது போதுமென்று
புதிதாய்க் காதலிக்க
புத்துணர்ச்சியுடன் வெளிக்கிட்டேன்
காதலிக்கலாம்…
ஒரு கை பார்த்துவிடுவோம்

புறப்பட்ட எனக்கு
சகுனம் பிழைத்தாற்போல்
நாலு கழுதை வயதாகிவிட்டது
இனி என்ன காதல் உனக்கு
முகத்தில் அடித்தாற் போல்
முடியாமல் இருந்தது

இருந்தும் முயற்சி செய்தேன்
முடியவில்லையே
என்னை ஒருத்தியும் பார்க்கவில்லை
அவர்கள் தங்கள் காதலனுடன்
சல்லாபித்திக்கொண்டு இருந்தார்கள்.
சரி
அவர்கள் பார்க்கவில்லை
நானாவது பார்ப்போமே
சின்ன முயற்சி

என் சின்ன முயற்சியே…
சுக்குநூறாக உடந்ததே.
“அண்ணா” என்றார்கள்
அந்த இளவட்டப் பெண்கள்
ஏதோ…
களுத்தில் தூக்குக் கயுறு
விழுந்தாற்போல் எனக்குள் ஓர் திணறல்

தத்தளித்து சுயநினைவுக்கு வந்து
வேண்டாம்…
வேண்டாம் இப்பழம் புளிக்கும் என்று
மனக் கனவுகளைக் கலைத்துவிட்டு – என்
மனைவி மஞ்சத்தில் மயங்கலாம் என்று
முடிவாக முடிவெடுத்தேன்

நான்…
நான் காதலிக்கப் போகின்றேன்
ஆமாம்
நான் காதலிக்கப் போகின்றேன்
என்னைக் கட்டிக் கொள்ளும் என்னவளை – என்
வாழ்வில் முதல் முறையாக காதல்
காத்திருக்காமல் கட்டிக் கொள்ளப் போகிறது
நான் காதலிக்கப் போகின்றேன்

கஷ்டப்பட்டு படித்து முன்னேறியவர்களுக்காக…

25/08/2004

2 Replies to “நேரம் வரும்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image